Published : 24 Jan 2020 10:26 AM
Last Updated : 24 Jan 2020 10:26 AM

ஆக்லாந்து ஈடன் பார்க்கில் இன்று இந்தியா - நியூஸிலாந்து டி 20-ல் மோதல்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி 20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் இந்தியஅணி விளையாட உள்ளது. இதில் டி 20 தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்தில் நியூஸிலாந்து டி 20தொடரை அணுகுகிறது இந்தியஅணி. அதேவேளையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்திய அணியை குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடரில் சந்திக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்விகளை சந்தித்ததால் வில்லியம்சனின் கேப்டன்ஷிப் யுத்திகளை முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கலம் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் குறைந்த பட்சம் டி 20 கிரிக்கெட்டிலாவது கேப்டன் பொறுப்பை வில்லியம்சன் துறக்கவேண்டும் எனவும் மெக்கலம் கூறியிருந்தார். இதனால் மிகுந்த நெருக்கடியுடன் களமிறங்குகிறார் வில்லியம்சன்.

இரு அணியிலுமே முன்னணிவீரர்கள் பலர் காயம் காரணமாகடி 20 தொடரில் பங்கேற்கவில்லை. இந்திய அணியை பொறுத்தவரையில் ஷிகர் தவண், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயத்தால் அவதியுற்று வருகின்றனர். எனினும் இவர்களுக்கு மாற்று வீரர்கள் வலுவாக இருப்பதால் இந்திய அணி சவாலுக்கு ஆயத்தமாகி உள்ளது.

நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி மற்றும் ஆல்ரவுண்டரான ஜிம்மி நிஷாம் ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சு துறையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது நியூஸிலாந்து அணி.அநேகமாக அந்த அணி இன்றைய ஆட்டத்தில் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் (மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி) களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் ரிஷப் பந்த்முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளக்கூடும். ஒருவேளை அணி நிர்வாகம் அவரைவெளியே அமரவைக்க முடிவு செய்தால் தொடக்க பேட்ஸ்மேன் பணியுடன் கே.எல்.ராகுல் விக்கெட்கீப்பிங் பணியையும் மேற்கொள்வார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 55 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் 4-வது இடத்தை ஸ்ரேயஸ் ஐயர் தக்கவைத்துக்கொள்ளக்கூடும்.

இதேபோன்று 5-வது இடத்தில் மணீஷ் பாண்டே அல்லது கேதார் ஜாதவ் இடம் பெறக்கூடும். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். மீதமுள்ள 6 இடங்களில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஆல்ரவுண்டர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறக்கூடும். வேகப்பந்து வீச்சில் பும்ரா, ஷமி ஆகியோருடன் நவ்தீப் சைனியும் மிரட்ட காத்திருக்கிறார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்விக்கு தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை டி 20 தொடரை வென்றது இல்லை.

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை 2-0 என்ற கணக்கிலும், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்திருந்தது. இந்த வரலாற்றை திருத்தி எழுதுவதில் விராட் கோலி குழுவினர் முனைப்பு காட்டக்கூடும். டி 20 மோதல் விவரம்முதல் போட்டிஜன.24ஆக்லாந்து12.20 பிற்பகல்2-வது போட்டிஜன.26ஆக்லாந்து12.20 பிற்பகல்3-வது போட்டிஜன.29ஹமில்டன்12.20 பிற்பகல்4-வது போட்டிஜன.31வெலிங்டன்12.20 பிற்பகல்5-வது போட்டிபிப்.2மவுன்ட்மவுங்கனுயி12.20 பிற்பகல்

நேரம்: பிற்பகல் 12.20;

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

விராட் கோலி: பழிவாங்க வேண்டும் என நினைத்தால் கூட, நியூஸிலாந்து வீரர்களை பார்க்கும் போது அந்த எல்லைக்குள் செல்ல முடியாது. நாங்கள் அவர்களுடன் களத்தில் சிறப்பாக பழகுகிறோம். உலகக் கோப்பை தொடரின் போது நான் கூறியது போன்று சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது நியூஸிலாந்து அணி. ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு பந்திலும் தங்களால் இயன்ற திறனை வெளிக்கொண்டுவர விரும்பக்கூடியவர்கள் நியூஸிலாந்து வீரர்கள். களத்தில் விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடியவர்கள் இல்லை அவர்கள். இந்தத் தொடர் நிச்சயம் உலகக் கோப்பை அரை இறுதி தோல்விக்கு பழிவாங்கும் தொடராக இருக்காது. இரண்டு தரமான அணிகள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் தொடராக இருக்கும். நியூஸிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்துவது சவால்தான். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேன் வில்லியம்சன்: ஆஸ்திரேலியாவில் அடைந்த தோல்வியில் இருந்து நகர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும். போட்டி அட்டவணை சவால்கள் நிறைந்ததாகவும் வேகமாவும் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது உலகின் சிறந்த அணிகளுள் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களது வீரர்கள் சவாலை எதிர்நோக்கி உள்ளனர். சிறப்பாக விளையாடவே விரும்புகிறோம். தோற்பதற்கு இல்லை. செயல்திறன் அடிப்படையில் எங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், ஸ்காட் குகேலின், காலின் மன்றோ, காலின் டி கிரான்ட்ஹோம், டாம் புரூஸ், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர், டிம் செய்பெர்ட், ஹமிஷ் பென்னட், இஷ் சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x