Last Updated : 23 Jan, 2020 07:20 PM

 

Published : 23 Jan 2020 07:20 PM
Last Updated : 23 Jan 2020 07:20 PM

அதிவேக ஆடுகளம், மழை: வலிமையான இந்தியாவை வீழ்த்துமா நியூஸி? வில்லியம்ஸனுக்கு கடும் சவால்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.

அதிவேகமான ஆடுகளம், மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் நாளை போட்டி நடக்கிறது.

இந்தியா, நியூஸிலாந்து இரு அணிகளிலும் காயம் காரணமாகப் பல முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெறாத சூழலில் களம் காண்கின்றன. ஆனால், நியூஸிலாந்து அணியைக் காட்டிலும், இந்திய அணிதான் வலிமையாகவும், பலசாதகமான அம்சங்களுடனும் போட்டியை எதிர்கொள்கிறது.

நியூஸிலாந்தில் இந்திய அணி எதிர்கொள்ளும் 2-வது டி20 தொடர் இதுவாகும். கடந்த முறை டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அந்த தோல்விக்கு நிச்சயம் இந்திய அணி பதிலடி கொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை நியூஸிலாந்து அணியுடன் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 8 போட்டிகளில் நியூஸிலாந்து அணிதான் வென்றிருக்கிறது. வெற்றியின் அடிப்படையில் இந்தியாவைவிட நியூஸிலாந்துதான் முன்னிலையில் இருப்பது அந்த அணிக்குச் சாதமாகும்.

இருப்பினும் கடந்த உலகக் கோப்பைப்போட்டி தோல்விக்குப்பின் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து தொடர்களையும் வென்று வருகிறது. குறிப்பாக மே.இ.தீவுகள், வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது, வலிமையான ஆஸ்திரேலிய அணியையும் இந்திய அணி வீழ்த்தி நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பைப் போட்டி நடைபெற இருப்பதால், அதற்குத் தயாராக இரு அணிகளும் இந்த தொடர் முக்கியமானதாகும்.

இந்திய அணியில் ஷிகர் தவண், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாமல் இருப்பது சற்று பின்னடைவுதான் என்றாலும் மற்ற வீரர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

அதிலும் காயத்திலிருந்து மீண்டு நல்ல ஃபார்மில் இருந்த தவண் மீண்டும் காயத்தில் விழுந்தது அணியின் பேட்டிங் வரிசைக்குச் சற்று பின்னடைவுதான்.

தொடக்க ஆட்டக்காரர் இடத்தை நிரப்ப ரோஹித் சர்மாவுடன் நாளை ராகுல் களமிறங்குவதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியத் தொடரில் ராகுலின் விக்கெட் கீப்பிங், பேட்டிங்கைப் பார்த்த கோலி, தொடர்ந்து ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பணி தரப்படும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார். ஆதலால், நாளை ரிஷப்பந்த் அணியில் இருந்தாலும்,ராகுல் விக்கெட் கீப்பிங் பணியைத் தொடர்வதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அசுரத் தனமாக ஃபார்மில் இருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், மணிஷ் பாண்டே ஆகியோர் நடுவரிசைக்கு பலம் சேர்க்கிறார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் நாளை வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேசமயம் குல்தீப், சாஹல் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

இருவருமே கடந்த முறை நியூஸிலாந்து தொடரில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளதால், இருவரில் ஒருவர் மட்டுமே தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, ஷமி இருவரும் இடம் பெறுவது நிச்சயம், ஷர்துல், ஷைனி இருவரில் ஷைனி இடம் பெறவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

ஆக்லாந்து ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 6 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கப்போகிறதா அல்லது 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கப்போகிறதா என்பது தெரியவில்லை

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களான டிரன்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகிய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறாதது அந்த அணிக்குப் பின்னடைவாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றகணக்கில் இழந்து மிகுந்த நம்பிக்கை இழந்த நிலையில் நியூஸிலாந்து காணப்படுகிறது. இது இந்திய அணிக்கு ஒருவிதத்தில் சாதகமான அம்சமாகும்.

அதுமட்டுமல்லாமல், நியூஸிலாந்து அணி தொடர் தோல்விகளால் கேப்டன் வில்லியம்ஸனுக்கு நெருக்கடி ஏற்பட்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆதலால், அவர் இந்த தொடரை வெல்லக் கடுமையாக முயல்வார்.

இந்த முறை நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹேனிஷ் பென்னட் என்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். காயம் காரணமாக அணியில் இடம் பெறாத நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணியின் அனுபவமில்லாத நடுவரிசையை அசைத்தும் பார்க்கும் அளவுக்கு பென்னட்டின் பந்துவீச்சு இருக்கம் என நம்பப்படுகிறது.

இதுதவிர ராஸ் டெய்லர், கப்தில், முன்ரோ, கோலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக ஏற்கனவே விளையாடிய அனுபவம் உடையவர்கள். சுழற்பந்து வீச்சில் இஷ் சோதி, சான்ட்னர் இருவரும் இந்திய வீரர்களுக்கு நிச்சயம் தொந்தரவாக இருப்பார்கள்.

அனைத்துக்கும் மேலாக உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, மைதானத்தின் தன்மை, காலநிலை ஆகியவை நியூஸிலாந்து அணிக்கு சாதகமான அம்சங்களாக அமையும்.

ஆக்லாந்தில் நாளை டி20 போட்டி தொடங்கும் நேரத்தில் சிறிய சாரல் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருந்தால் போட்டி தொடங்க தாமதம் ஆகலாமேத் தவிர ரத்து செய்யும் அளவும் மழை இருக்காது.

இந்திய நேரப்படி நாளை நண்பகல் 12.20 மணிக்கு போட்டி தொடங்கும்.

டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயோஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர்

நியூஸிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), மார்டின் கப்தில், ராஸ் டெய்லர், ஸ்காட் குகிலெஜின், கோலின் முன்ரோ, கோலின் டி கிராண்ட்ஹோம், டாம் புரூஸ், டேர் மிட்ஷெல், மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபெர்ட், ஹமிஷ் பென்னட், ஈஷ் ஷோசி, டிம் சவுதி, பிளேயர் டிக்னர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x