Last Updated : 23 Jan, 2020 11:09 AM

 

Published : 23 Jan 2020 11:09 AM
Last Updated : 23 Jan 2020 11:09 AM

ஒரு போட்டியில் தோற்றாலும் கேப்டனைத்தான் குறை சொல்கிறார்கள்; முடிவுகளை வைத்து தலைமைப் பதவியைத் தீர்மானிக்க முடியாது: வில்லியம்ஸனுக்கு கோலி ஆதரவு

ஒருபோட்டியில் தோற்றால்கூட கேப்டனைத்தான் குறை சொல்கிறார்கள். முடிவுகளை வைத்து தலைமைப் பதவியைத் தீர்மானிக்க முடியாது என்று நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து- இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், கடைசியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது.

இந்தியத் தொடருக்கு முன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இதனால் நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரன்டென் மெக்கலம், கேப்டன் வில்லியம்ஸனின் திறமை மீது கேள்வி எழுப்பி இருந்தார். கேப்டனுக்கு உரிய திறமையையும், அதன் மீதான பற்றையும் வில்லியம்ஸன் மெல்ல இழந்து வருகிறார். குறைந்தபட்சம் டி20 கேப்டனையாவது வேறு வீரர்களுக்கு வழங்க அவர் முன்வர வேண்டும் என்று மெக்கலம் கூறி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்த கேன் வில்லியம்ஸன், "கேப்டன் பதவியை விட்டு விலகவும், புதிய கேப்டனுக்கு வழிவிடவும் நான் தயாராக இருக்கிறேன். அதற்குரிய பெயரைச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், வில்லியம்ஸன் குறித்துக் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்குக் கோலி பதில் அளிக்கையில், " ஒரு போட்டியில் ஒரு அணி தோற்றவுடன், அனைவரும் கேப்டனைத்தான் குறை கூறுகிறார்கள். எப்போதெல்லாம் லேசான பின்னடைவுகள் வருகின்றனவோ அப்போது இதுபோன்ற விமர்சனங்கள்தான் இப்போது வருகின்றன. மூன்றுவிதமான போட்டிகளுக்கும் கேப்டனுக்கு பொறுப்பு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை அணிக்கு வீரராகவும், கேப்டனாகவும் என்ன செய்ய முடியும் என்பதில் மட்டுமே நான் கவனமாக இருக்கிறேன். அந்தத் தேவைகளை நாம் நிறைவு செய்யும்போதுதான் அணியை வழிநடத்த முடியும்.

தலைமைப் பதவி என்பது எப்போதும் முடிவுகளை வைத்துத் தீர்மானிக்க முடியாது. எவ்வாறு அணியை ஒருங்கிணைத்துச் செல்கிறார்கள், உங்கள் தலைமையில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமையும். என்னைப் பொறுத்தவரை வில்லியம்ஸன் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிறார்.

நியூஸிலாந்து வீரர்கள் வில்லியம்ஸன் மீது அதிகமான மதிப்பும், அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளார்கள். நான் பார்த்தவரைக்கும் மிகவும் ஸ்மார்ட்டான கிரிக்கெட் வீரர். ஒரு அணி நம்முடைய அணியை வீழ்த்தினால், தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும், அதை கேப்டன்ஷிப் குறைபாடு என்று எடுக்கக்கூடாது.

ஆதலால், வில்லியம்ஸனைக் கட்டாயப்படுத்தி அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக வைக்கக் கூடாது, அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x