Published : 23 Jan 2020 09:56 AM
Last Updated : 23 Jan 2020 09:56 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச், ரோஜர் பெடரரும், மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி, நவோமி ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 146-ம் நிலை வீரரான ஜப்பானின் தட்சுமா இடோவையும், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 41-ம் நிலை வீரரான செர்பியாவின் பிலிப் கிரஜினோவிச்சையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

6-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸை எதிர்த்து விளையாட இருந்த ஜெர்மனியின் பிலிபி ஹோல்ஸ்ரைபர் காயம்காரணமாக விலகினார். இதில் சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயின் ராபர்டோ பவுதிஸ்டா அகுட், 14-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன், 22-ம் நிலை விரரான கைடோ பெல்லா ஆகியோர் வெற்றிபெற்றனர்.

8-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி6-7, 4-6, 6-4, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் 100-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரெனிடம் தோல்வியடைந்தார். இதேபோன்று 18-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-7, 6-3, 7-6, 6-7 (3-10) என்ற செட் கணக்கில் 80-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலிடமும், 21-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேர் 2-6, 7-6, 6-3, 1-6, 6-7 (3-10) என்ற செட் கணக்கில் 39-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சிடமும் வீழ்ந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லேபார்டி 6-1, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்லோவேனியாவின் போலோனா ஹெர்காக்கையும், 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜெங் ஷைசாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர். 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா விட்டோவா 7-5, 7-5 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் பவுலா படோஷாவையும், 8-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனாவில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்லோவேனியாவின் தமரா ஜிதானெக்கையும், டென் மார்க்கின் கரோலினி வோஸ்னியாக்கி 7-5, 7-5 என்றநேர் செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டயானாயஸ்த்ரெம்ஸ்காவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

போபண்ணா தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் போர்ச்சுகல்லின் கரேனோ பஸ்டா, ஸ்பெயினின் ஜோவா சோயுசா ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது. அதேவேளையில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் யசுதகா உச்சியாமா ஜோடி 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x