Published : 22 Jan 2020 05:47 PM
Last Updated : 22 Jan 2020 05:47 PM

ஒரு நாள் அணியில் டு பிளெசிஸுக்கு இடமில்லை: டி காக் கேப்டன் - தெ.ஆ. அதிர்ச்சி முடிவு

தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் போட்டிகளுக்கான கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாக குவிண்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். பெரிய அதிர்ச்சி என்னவெனில் ஓரளவுக்கு நல்ல பார்மில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் ஃபாப் டு பிளெசிஸ் அணியிலேயே இல்லை.

இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரில் ஆடவிருக்கிறது இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று சூசகமாக டுபிளெசிஸ் தெரிவித்தது ஒருநாள் போட்டி முடிவிலும் வந்து விடியும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதாக டுபிளெசிஸ் நீக்கத்துக்குக் காரணம் தெரிவித்துள்ளது. டுபிளெசிஸுடன் ரபாடா, ஸ்டெய்ன், கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

குவிண்டன் டி காக் 115 ஒருநாள் போட்டிகளில் 4,907 ரன்கள் எடுத்துள்ளார். டுபிளெசிஸ் ஐசிசி ஒருநாள் தரவரிசை பேட்டிங்கில் 4ம் இடத்தில் உள்ளார், ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார், ஓய்வு என்று காரணம் கூறுகிறது தென் ஆப்பிரிக்கா வாரியம்.

ஆனால் ரபாடா இல்லாததால் லுங்கி இங்கிடி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் லுதோ சிபம்லா, டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் சிசந்தா மகலா, இடது கை ஸ்பின்னர் ஜான் ஃபோர்ட்டுயின் ஆகியோர் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர் ஜனிமன் மலான், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் கைல் வெரைன் ஆகிய புதுமுகங்களும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி வருமாறு:

குவிண்டன் டி காக் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், பவுமா, ராஸி வான் டெர் டியூசன், டேவிட் மில்லர், ஜோன் ஜோன் ஸ்மட்ஸ், பெலுக்வயோ, லுதோ சிபம்லா, இங்கிடி, ஷம்சி, மகாலா, ஜான் ஃபோர்ட்டுயின், பியூரன் ஹென்றிக்ஸ், ஜனிமன் மலான், கைல் வெரைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x