Published : 22 Jan 2020 08:37 AM
Last Updated : 22 Jan 2020 08:37 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் முன்னேற்றம்; ஷரபோவா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வி கண்டு வெளியேறினார். ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும், குரோஷியாவின் டோனா வேகிக்கும் மோதினர். இதில் டோனா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். தரவரிசையில் மிகவும் பின்தங்யிருந்த மரியா ஷரபோவா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு நேரடி தகுதி மூலம் முதல் சுற்றில் விளையாடினார். மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினா மிளாடெனோவிக்கைச் சாய்த்தார்.

ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனீபர் பிராடியையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-1 என்ற கணக்கில் ரஷ்யாவின் டேரியா கஸாட்கினாவையும் வென்றனர்.

ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பொலிவியா வீரர் ஹியூகோ டெல்லியைச் சாய்த்தார்.

இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக களமிறங்கியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டங்களில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 7-6 (7/2) 6-2 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மேக் பர்சலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் 6-3, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாபோவை வீழ்த்தினார்.

ஆஸ்திரியாவின் டோமினிக் தியம் 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் மன்னாரினோவையும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 7-6, 6-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போஸ்னியாவின் சும்ஹரையும் தோற்கடித்தனர்.

பிரஜ்னேஷ் தோல்வி: ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 4-6, 2-6, 5-7 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரர் தாத்சுமா இடோவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x