Last Updated : 21 Jan, 2020 09:45 PM

 

Published : 21 Jan 2020 09:45 PM
Last Updated : 21 Jan 2020 09:45 PM

நியூஸி.ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; பிரித்வி ஷா முதன் முதலில் அறிமுகம்: ஷிகர் தவணுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஷிகர் தவணுக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டுள்ளார்
ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து, நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி 26-ம்தேதி ஆக்லாந்து நகரிலேயே நடக்கிறது.

29-ம் தேதி 3-வது போட்டி ஹேமில்டன் நகரிலும்,31-ம் தேதி 4-ம் போட்டி வெலிங்டனிலும், 5-வது மற்றும் கடைசிப் போட்டி டவுரங்கா நகரிலும் நடக்கிறது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துக்கு நேற்று இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு, இன்று ஆக்லாந்து சென்றடைந்தனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண் காயம் காரணமாக இந்திய அணியுடன் செல்லவில்லை.

இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது.

பிரித்வி ஷா : கோப்புப்படம்

ஒருநாள் போட்டிக்கான அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா, இடம் பெற்றுள்ளார். முதல்முறையாக ஒருநாள் அணிக்கு பிரித்வி ஷா அழைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், என்சிஏவில் தொடர்ந்து பயிற்சியில் இருப்பதால் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. அதேபோல வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருநாள் தொடருக்கான அணியில் கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.

காயமைடந்த ஷிகர் தவணுக்கு பதிலாக டி20 தொடரில் சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்:

விராட்கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ்அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர், கேதார் ஜாதவ்.

டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயோஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x