Published : 21 Jan 2020 12:47 PM
Last Updated : 21 Jan 2020 12:47 PM

சதமெடுத்து பலகாலம் ஆகிறது, சமீபத்திய சராசரி 21.25: டெஸ்ட் வாழ்க்கையை முடிக்கிறார் டு பிளெசிஸ்?

இங்கிலாந்துக்கு எதிராக வாண்டரர்ஸில் நடக்கவிருகும் 4வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி போட்டி என்று 35 வயது தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் என்று தெரிவித்துள்ளார்.

டுபிளெசிஸின் பார்ம் பெரிய அளவில் சரிந்துள்ளது. கேப்டன்சியிலும் கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் தென் ஆப்பிரிக்கா தோற்றுள்ளது. சதம் எடுத்து ஓராண்டுக்கும் மேலாகிறது, கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சராசரி 21.25 என்று குறைந்து போயுள்ளது.

எனவே இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியே கடைசி போட்டியா என்று டுபிளெசிஸிடம் கேள்வி எழுப்பிய போது, “ஆம், சாத்தியம்தான். உணர்ச்சிவயப்பட்டு நான் முடிவெடுக்க விரும்பவில்லை. அணிக்கு வலுவான தலைவராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு தலைவர் செய்யும் மோசமான காரியமாக நான் எதைக் கருதுகிறேன் என்றால் பாதி சீரியசில் ‘சாரி பாய்ஸ் நான் ஆட்டத்துக்கு வரவில்லை, போதும்’என்று கூறி ஒதுங்குவதையே . இது தலைமைக்கு ஒரு போதும் அழகல்ல.

கடினமான காலங்களிலும் பணியில் நாம் தொடர வேண்டும். டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு நான் என் நிலை பற்றி ஆய்வு செய்வேன். அதிகம் டெஸ்ட் போட்டிகள் இல்லை எனவே அடுத்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரியது, அதில் ட்ரா செய்ய வலுவாக ஆட வேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் நான் உலகத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவனாக இருப்பதை சராசரி காட்டுகிறது, டி20 கிரிக்கெட்டிலும் பரவாயில்லை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. இதில் என் சராசரி எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இல்லை.

நாம் அணியை விட்டு விலகும் போதுதான் நம் தேவை அதிகமாக உணரப்படும், ஆனால் இது என் ஸ்டைல் அல்ல. என் தேவை அதிகமாக அணிக்கு இருக்கும் போது நான் விட்டுவிட்டுச் செல்ல மாட்டேன். அணி மாற்றத்தில் இருக்கிறது, இப்போது நான் அவுட் என்று கூறுவது முறையாகாது” என்றார் டுபிளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x