ஐசிசி ஒருநாள் தரவரிசை: அசைக்க முடியாத இடத்தில் கோலி, ரோஹித், பும்ரா; தவண், ராகுல் முன்னேற்றம்

விராட் கோலி, ரோஹித் சர்மா : கோப்புப்படம்
விராட் கோலி, ரோஹித் சர்மா : கோப்புப்படம்
Updated on
1 min read

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் 183 ரன்கள் சேர்த்த கேப்டன் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஒரு சதம் உள்பட 171 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா 868 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களையும் கேப்டனும், துணை கேப்டனும் தக்கவைத்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 829 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 776 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் 773 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 769 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளார்.

மற்ற இந்திய வீரர்களான ஷிகர் தவண் இந்தத் தொடரில் 170 ரன்கள் சேர்த்ததையடுத்து, 7 இடங்கள் முன்னேறி 15-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கே.எல்.ராகுல் 146 ரன்கள் குவித்ததால், 21 இடங்கள் உயர்ந்து, 50-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் திரும்பிய பும்ரா விக்கெட்டுகளை அதிகமாக வீழ்த்தாவிட்டாலும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 764புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 3-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர் காகிஸோ ரபாடா 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மினிஸ் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 2 இடங்கள் உயர்ந்து 27-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீஸ் ஸ்மித் இந்தத் தொடரில் 229 ரன்கள் குவித்ததையடுத்து, 4 இடங்கள் முன்னேறி, 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in