

முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்போட்டி இன்று கோலாகலமாகத்தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சுஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்டில் முதலாவதாக நடைபெறுவது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியாகும். இந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 2-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சும், மகளிர்ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் முதல்நிலையில் உள்ளனர்.
இந்த முறை இவர்களே பட்டம்வெல்வர் என டென்னிஸ் விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஒற்றையர் பிரிவில் இதுவரை செரீனா வில்லியம்ஸ் 23 பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் ஒருபட்டத்தை வென்றால் அவர், மார்கரெட் கோர்ட்டின் 24 பட்டங்கள் சாதனையை சமன் செய்துவிடுவார்.
அதேபோல் ஜோகோவிச்சும் இம்முறை பட்டம் வெல்வதில் மும்முரமாக உள்ளார். அவருக்குப் போட்டியாக ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும். ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும் களத்தில் குதித்துள்ளனர். ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டோமினிக் தியம், டேனியல் மெத்வதேவ், பேபியோ பாக்னினி, ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஆஸ்திரேலிய வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ருமேனியாவின்சிமோனா ஹாலெப் ஆகியோர்செரீனா வில்லியம்ஸுக்கு சவால்அளிக்கும் விதத்தில் களமிறங்கிஉள்ளனர்.
இந்த போட்டிக்கான பரிசுத் தொகை விவரத்தை போட்டி அமைப்பாளர்கள் கடந்த மாதம் வெளியிட்டனர். இதன்படி இந்தஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 350 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம்வெல்லும் வீரர், வீராங்கனைக்குதலா ரூ. 20 கோடியே 31 லட்சம் பரிசுத்தொகையாக கிடைக்கும்.
பிரஜ்னேஷ்
ஆஸ்திரேலிய ஓபன் போட்டி பிரதான சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ், தகுதிச் சுற்றுஇறுதியில் லாட்வியா வீரர் குல்பீஸிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், நேரடி நுழைவு தகுதி பெற்ற வீரர் ஒருவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த வாய்ப்பு பிரஜ்னேஷுக்கு கிடைத்தது.
இதையடுத்து கிராண்ட்ஸ்லாம் போட்டி பிரதான சுற்றில் 5-ஆவது முறையாக ஆடுகிறார் பிரஜ்னேஷ். ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் டட்ஸுமோவுடன் மோதுகிறார் பிரஜ்னேஷ். – பிடிஐ