Last Updated : 19 Jan, 2020 11:32 PM

 

Published : 19 Jan 2020 11:32 PM
Last Updated : 19 Jan 2020 11:32 PM

ரோஹித் அமர்க்கள சதம், கோலியின் அர்ப்பணிப்பு: பந்துவீச்சாளர்களுக்கு சபாஷ்; தொடர்ந்து 7-வது சர்வதேச தொடரை வென்றது இந்திய அணி; ஆஸி.க்கு பதிலடி 

கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர் : படம் உதவி ட்விட்டர்

பெங்களூரு 

ரோஹித் சர்மாவின் அமர்க்களமான சதம், கேப்டனுக்கே உரித்தான கோலியின் அர்ப்பணிப்பு ஆட்டம் போன்றவற்றால் பெங்களூருவில் இன்று பகலிரவாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1என்ற கணக்கில் வென்றது.
ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றிக்கு முக்கியக் காரணமாகஅமைந்த விராட், ரோஹித் கூட்டணி : படம் உதவி ட்விட்டர்

கடந்த ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ஆஸி.அணி ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று சென்றது. அதற்கு பதிலடியாக இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது.

200-வது உள்நாட்டுப் போட்டி

இந்திய அணி உள்நாட்டில் விளையாடிய 200-வது ஒருநாள் போட்டி இதுவாகும். இந்த ஆட்டத்தில் கோலி படை பெற்ற வெற்றி இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணி தான் மோதிய அனைத்து விதமான போட்டித்தொடர்களிலும் (டி20,டெஸ்ட்,ஒருநாள்) வென்று வருகிறது. அந்த வகையில் இந்திய அணிக்கு இது 7-வது சர்வதேச தொடர் வெற்றியாக அமைந்துள்ளது.

சமன் செய்த ரோஹித்

வெற்றிக்கு இந்திய அணியின் பந்துவீச்சு முக்கியக் காரணமாகக் குறிப்பிட வேண்டும். அதேசமயம், அற்புத சதம் அடித்த துணைக் கேப்டன் ரோஹித் சர்மா(119), களமிறங்குபோதெல்லாம் நங்கூரமிடும் கேப்டன் விராட் கோலி(89) ஆகியோர் வெற்றிக்கு உரித்தானவர்கள்.

ரோஹித் சர்மா அடித்த சதம் அவரின் ஒருநாள் கிரிக்கெட்டில் 29-வது சதமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி 8 சதம் அடித்துள்ள நிலையில் அதை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். சச்சின் 9 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். நிச்சயம் இந்த ஆண்டு இறுதியில் அதை இருவரும் முறியடிப்பார்கள் என நம்பலாம்.
மிக வேகமாக ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா படைத்தார். 217 இன்னிங்ஸில் ரோஹித் இந்த சாதனையை எட்டினார்.

100-வது முறை, தோனி சாதனை முறியடிப்பு

விராட் கோலியை எடுத்துக்கொண்டால் இந்த போட்டியில் அவர் அடித்த 89 ரன்கள் என்பது அவர் 100-வது முறையாக 50-ரன்களுக்கு மேல் அடித்த ஸ்கோராகும். மேலும், விராட் கோலி கேப்டனாக இருந்து 5 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 82 இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார் கோலி, ஆனால், தோனி 127 இன்னிங்ஸிலும், பாண்டிங் 131 இன்னிங்ஸிலும் எட்டினர்.

சபாஷ்...

பெங்களூரு ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி இதில் ஆஸ்திரேலிய அணியை 286 ரன்களுக்கு சுருட்டியதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் ஒரு சபாஷ் சொல்லலாம்.

பும்ராவின் துல்லியமான,நெருக்கடி தரும் பந்துவீச்சு, ஷமியின் விக்கெட் வீழ்த்தும் திறமை, ஜடேஜா,குல்தீப் மாயஜால சுழற்பந்துவீச்சு, ஷைனியின் வேகம் ஆகியவை இந்திய அணியின் வெற்றியை லேசாக்கியது என்றால் மிகையில்லை. ஆஸ்திரேலிய அணி ஸ்கோர் 300 ரன்களுக்கு மேல் செல்லும் என கணிக்கப்பட்டநிலையில் அவர்களை நெருக்கடி தந்து கவிழ்த்தியது பாராட்டுக்குரியது.

தோள்பட்டை காயம் காரணமாக ஷிகர் தவண் வெளியேறியது, காயத்தால் ரிஷப்பந்த் திரும்பி ஆடவராதது போன்ற பின்னடைவுகள் இருந்தாலும் மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடிய வெற்றியை தேடித்தந்துள்ளது புகழ்ச்சிக்குரியது.

உலகம் தரம் எங்கே?

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், லாபுஷேன் தவிர பேட்டிங்கில் ஒருவரும் ஜொலிக்கவில்லை. உலகம் தரம்வாய்ந்த இரு பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், ஸ்டார்க் இருவரும் 16 ஓவர்கள் வீசி 130 ரன்கள் வி்ட்டுக்கொடுத்தும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தமுடியாமல் வெறும்கையுடன் வெளியேறினார்கள். 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சிறிதுகூட தொந்தரவு கொடுக்க முடியவில்லை என்பது அந்த அணியின் சுயபரிசோதனைக்குரிய விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் கடைசி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆஸி, இழந்ததுள்ளது, ராஜ்கோட் போட்டியிலும் இதேபோலவே ஆஸ்திரேலிய அணி கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் அதகளம்

287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ரோஹித் சர்மா, ராகுல் களமிறங்கினர். ரோஹித் சர்மா மெதுவாகத் தொடங்கிய நேரம் செல்லச் செல்ல தனது வழக்கமான அதிரடிக்குமாறினார். கம்மின்ஸ், ஸ்டார்க் ஓவரை ரோஹித் சர்மா வெளுத்து வாங்கி, சிக்ஸரும், பவுண்டரிகளும் விளாசினார். 10 ஓவர்கள் பவர் ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61ரன்கள் சேர்த்தது.

ஆஸ்டர் அகர் வீசிய 13-வது ஓவரில் ராகுல் 19 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 69 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து கேப்டன் கோலி களமிறங்கி ரோஹித்துடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது, ரோஹித் சர்மாவின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. சிக்ஸர், பவுண்டரிகளாக பந்து பறந்தது. ரோஹித் சர்மா 56 பந்துகளில் அரை சதம் அடித்தார், கோலி 61 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

29-வது சதம்

நங்கூரமிட்டு பந்துவீ்ச்சை துவம்சம் செய்துவரும் இருவரையும் பிரிக்க பிஞ்ச் பலபந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனில்லை. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 110 பந்துகளில் தனது 29-வது சதத்தை நிறைவு செய்தார்.

ஆடம் ஸம்பா வீசிய 37-வது ஓவரில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 119 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 137 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கோலி நங்கூரம்

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, கோலியுடன் இணைந்தார். இருவரின் ஆட்டத்தில் அணியை வெற்றியை நோக்கி நகர்ந்தது. பந்துகளும், ரன்களும் சமமான நேரத்தில் வந்தபோது ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரி, சிக்ஸர் அடித்து எளிதாக்கினார். சதத்தை நோக்கி நகர்ந்த விராட் கோலி, 81 ரன்னில் ஹேசல்வுட் பந்துவீச்சில் போல்டாகினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த மணிஷ் பாண்டேயும், ஸ்ரேயாஸ் அய்யரும் இறுதிவரை நிலைத்து ஆடி வெற்றி தேடித்தந்தனர். மணிஷ்பாண்டே கடைசியா வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும் மணிஷ் பாண்டே 8 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

47.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட்,அகர், ஸம்பா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்ச்சி

முன்னதாக டாஸ்வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்திலேயே வார்னர் 3 ரன்னில் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் பிஞ்ச் 19 ரன்னில் ரன்அவுட் ஆனது பெரும் பின்னடைவாக அமைந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ஸ்மித் சதம் வீண்

லாபுஷேன் 54 ரன்கள் சேர்த்திருந்த போது ஜடேஜா பந்துவீச்சில் கோலி டைவ் அடித்து சூப்பர் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இந்த கூட்டணி 127 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஸ்மித் 117 பந்துகளில் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார்.

ஆனால், 40 ஓவர்கள் வரை வலுவான நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் என்று இருந்த ஆஸி.அணி அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. காரே 35 ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வதுவிக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர்.

சரிவு

வலுவாக ஆடிய ஸ்மித்தை 132 ரன்னில் ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். டீப் மிட் விக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் வெளியேறினார்.அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஒருவரும் நிலைத்து விளையாடவில்லை. டர்னர் 4, கம்மின்ஸ் 0, ஸம்பா 1 என வரிசையாக வெளியேறினர். கடைசி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸி.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x