Published : 19 Jan 2020 06:51 PM
Last Updated : 19 Jan 2020 06:51 PM

ரோஹித் சர்மா புதிய மைல்கல்:சச்சின், கங்குலி சாதனை முறியடிப்பு

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டி, கங்குலி, சச்சின் சாதனையை முறியடித்தார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில் பெங்களூருவில் இன்று 3-வது ஒருநாள் ஆட்டம் நடந்து வருகிறது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 4 ரன்கள் சேர்த்தபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ரோஹித் சர்மா தனது 217-வது இன்னிங்ஸில் ஒரு நாள் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டினார். முதலிடத்தில் விராட் கோலி 194 இன்னிங்ஸிலும், 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ் 208 இன்னிங்ஸிலும் 9 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். இப்போது 3வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி 228 இன்னிங்ஸிலும், சச்சின்235 இன்னிங்ஸிலும், லாரா 239 இன்னி்ங்ஸிலும், தோனி 244 இன்னிங்ஸிலும் 9 ஆயிரம் ரன்களை எட்டி இருந்தனர். இதில் கங்குலி, சச்சின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக ராஜ்கோட் போட்யின் போது, ரோஹித் சர்மா ஒரு சாதனையைப் படைத்தார். அதாவது தொடக்க வீரராகக் களமிறங்கி, அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் சாதனையைத் தனதாக்கினார். சச்சின், ஹசிம் அம்லா ஆகியோரை ரோஹித் பின்னுக்குத் தள்ளினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x