

பெங்களூருவில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது.
40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய அணி வீரர்களின் கட்டுக்கோப்பான, துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது ஆஸி. இதனால் கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சேர்க்க முடிந்தது. 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, பும்ரா அருமையாகப் பந்துவீசி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் எடுத்து 2 விக்கெட் வீழ்த்தி 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
விக்கெட் வீழ்த்த முடியாவிட்டாலும் 10 ஓவர்கள் வீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துக் கட்டுக்கோப்பாக பும்ரா பந்துவீசியது பாராட்டுக்குரியது.
பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக திகழும் பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 300 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. மிகவும் பாராட்டுக்குரியது.
அதிலும் ஷமியின் கடைசிக்கட்ட ஓவர்கள் ஆஸ்திரேலிய அணியின் டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை திணறடித்து, விக்கெட்டுகளையும் சாய்த்தது. ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், லாபுஷேன் தவிர வேறு எந்த வீரரும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பேட்டிங்கில் பங்களிப்புச் செய்யவில்லை. அபாரமாக ஆடிய ஸ்மித் 132 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்
கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி பெர்த் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்மித் கடைசியாக ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் ஸ்மித் சதமடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஸ்மித்துக்கு 9-வது சதமாகவும், இந்தியாவுக்கு எதிராக 3-வது சதமாகவும் அமைந்தது.
ஸ்மித்துக்கு உறுதுணையாக ஆடிய லாபுஷேன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
டாஸ்வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். கடந்த போட்டியைப் போலவே இந்த முறையும் விரைவிலேயே வார்னரை இந்திய வீரர்கள் விரட்டினர்.
ஷமி வீசிய 4-வது ஓவரில் அருமையன அவுட் ஸ்விங்கை தட்ட முயன்று அது ராகுலிடம் கேட்சாக மாறியது. வார்னர் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஸ்மித், பிஞ்ச்சுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய பிஞ்ச் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இதனால் பவர்ப்ளே 10 ஓவர்களில் ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுஷேன் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டு, ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இவர்களைப் பிரிக்க பல பந்துவீச்சாளர்கள் முயன்றும் முடியவில்லை.
லாபுஷேன் 54 ரன்கள் சேர்த்திருந்த போது ஜடேஜா பந்துவீச்சில் கோலி டைவ் அடித்து சூப்பர் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இந்த கூட்டணி 127 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து வந்த ஸ்டார்க் வந்தவேகத்தில் ஜடேஜா பந்துவீச்சில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஏன் இந்த நேரத்தில் ஸ்டார்க்கை இறக்கினார்கள் எனத் தெரியவில்லை.
அடுத்துவந்த காரே, ஸ்மித்துடன் ஓரளவுக்கு ஒத்துழைத்து விளையாடினார். ராஜ்கோட் போட்டியில் சதத்தை தவறவிட்ட ஸ்மித் இந்த முறை நிதானமாக ஆடி சதம் அடித்தார். ஸ்மித் 117 பந்துகளில் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார். அதன்பின் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை அடித்து விளையாடத் தொடங்கினார்.
ஆனால், 40 ஓவர்கள் வரை வலுவான நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் என்று இருந்த ஆஸி.அணி அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. காரே 35 ரன்னில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வதுவிக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர்.
வலுவாக ஆடிய ஸ்மித்தை 132 ரன்னில் ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். டீப் மிட் விக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஒருவரும் நிலைத்து விளையாடவில்லை. டர்னர் 4, கம்மின்ஸ் 0, ஸம்பா 1 என வரிசையாக வெளியேறினர்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.