Published : 19 Jan 2020 10:19 AM
Last Updated : 19 Jan 2020 10:19 AM

ஹாக்கியில் இந்திய அணி வெற்றி

ஆடவருக்கான புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே குர்ஜாந்த் சிங் பீல்டு கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 12-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ரூபிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என்ற முன்னிலையை அடைந்தது.

அடுத்த 2-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி பதிலடி கொடுத்தது. அந்த அணி வீரர் ஜன்சென், பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்து அசத்தினார். 28-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜெரோன் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.

3-வது கால் பகுதியின் தொடக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து மிரட்டியது. 34-வது நிமிடத்தில் மன்தீப் சிங்கும், 36-வது நிமிடத்தில் லலித் உபாத்யாவும் பீல்டு கோல் அடித்ததால் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. 46-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரூபிந்தர் சிங் கோல் அடிக்க இந்திய அணியின் முன்னிலை 5-2 என அதிகரித்தது.

இதன் பின்னர் நெதர்லாந்து அணி போராடியும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறும் 2-வது கட்ட மோதலில் இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x