Last Updated : 18 Jan, 2020 04:36 PM

 

Published : 18 Jan 2020 04:36 PM
Last Updated : 18 Jan 2020 04:36 PM

கே.எல்.ராகுல் காட்டடி ஆட்டம்: ஸ்மித், வில்லியம்ஸன், ஏபிடி எப்படி உதவினார்கள்?

ராஜ்கோட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நடுவரிசையில் இறங்கி விளாசிய இந்திய அணி வீரர் கே.எல். ராகுலுக்கு ஸ்மித், வில்லியம்ஸன், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் உதவியது தெரியவந்துள்ளது.

ராஜ்கோட்டியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன்1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.

இந்த ஆட்டத்தில் நடுவரிசையில் களமிறங்கிய கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடிய 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

கே.எல். ராகுல் கடந்த சில சர்வதேச போட்டிகளாகவே எந்த வரிசையில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக கடந்த 6 போட்டிகளில் ராகுல், 102, 77, 45, 54,47,80 ரன்கள் குவித்து வலுவான ஃபார்மில் இருந்து வருகிறார்.

இதுவரை ராகுல் 17 முறை தொடக்க ஆட்டக்காரராகவும், 3 முறை 3-ம் இடத்திலும், 4 முறை 4-வது இடத்திலும், 5-வது இடத்தில் இரு முறையும், 6-வது வரிசையில் ஒருமுறையும் களமிறங்கி அடித்து நொறுக்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 7-வது வரிசையில் களமிறங்கிய நிலையில் ராகுல் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்

நடுவரிசையில் சிறப்பாக ஆடிய தனக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன், தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோர் உதவியுள்ளார்கள் என்பதை அவரே விவரித்துள்ளார்.

கே.எல்.ராகுல் போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பேட்டிங்கில் தொழில்நுட்ப ரீதியாக புதிதாக எந்த முயற்சியிலும், பயிற்சியிலும் நான் ஈடுபட்டதாக நினைக்கவில்லை. நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாகச் செயல்படும் சில வீரர்களிடம் பேசினேன்,அவர்களின் பேட்டிங் தொடர்பான வீடியோக்கள் பலவற்றை பார்த்தேன். கேப்டன் விராட் கோலியிடம் பேசிய போது ஏராளமான டிப்ஸ் அளித்தார்.

ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்ஸன் ஆகியோர் எவ்வாறு நடுவரிசையில் களமிறங்கி விளையாடுகிறார்கள், எவ்வாறு களத்தில் நிற்கிறார்கள் என்பதை வீடியோக்கள் மூலம் பார்த்தேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு சூழலிலும் இவர்கள் மூவரும் எவ்வாறு விளையாடுகிறார்கள், பந்துவீச்சை எவ்வாறு அணுகுகிறார்கள், எந்த சூழலில் அடித்து ஆடுகிறார்கள் என்பதை கவனித்தேன்.

இந்த வீடியோக்களைப் பார்த்தபின் அதைப்போலவே நான் போட்டியில் செயல்படுத்தினேன். இதனால் போட்டியின் ஒவ்வொரு பகுதியையும் என்னால் சிறப்பாக அடையாளம் கண்டு விளையாட முடிந்தது.

எனக்கு எந்த வரிசையிலும் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. என்னுடைய இன்னிங்ஸை எவ்வாறு தக்க வைக்க முடியும் என்பதை அறிந்து கொண்டிருக்கிறேன். அதேசமயம், பேட்டிங் நுணுக்கத்தில் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பேட்டிங் என்பது ஒரு கலை, அதை ஒவ்வொரு வரிசையிலும் களமிறங்கும் போது ஒவ்வொரு கலையை கற்று வருகிறேன். அதை அனுபவித்துதான் விளையாடுகிறேன். புதிய வரிசையில் களமிறங்கும் போது பந்துவீச்சாளர்களை எவ்வாறு அணுக முடியும், அவர்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை அறியலாம்,

சூழலை எவ்வாறு கையாள்வதும் தெரிந்து கொள்ள முடிகிறது. வரிசை மாறி களமிறங்கும்போது எந்தவிதமான அழுத்தத்தையும், நெருக்கடியையும் உணர்வதாக நான் அறியவில்லை.
இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x