Last Updated : 18 Jan, 2020 12:29 PM

 

Published : 18 Jan 2020 12:29 PM
Last Updated : 18 Jan 2020 12:29 PM

2 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியுடன் 2-வது இன்னிங்ஸ் தொடக்கம்: ஹோபர்ட் டென்னிஸில் சானியா இணை சாம்பியன்

பிரசவத்துக்குப் பின் 2 ஆண்டுகள் கழித்து டென்னிஸ் விளையாட வந்த இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் டென்னிஸ் வாழ்க்கையில் தனது 2-வது இன்னிங்ஸை வெற்றியுடன் சானியா தொடங்கியுள்ளார்.

விரைவில் தொடங்க உள்ள கிராண்ட் ஸ்லாம் ஓபன் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா பங்கேற்ற இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி ஊக்கமாக அமையும்.

திருமணம் முடிந்து குழந்தைப் பிறப்புக்குப் பின் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் குழந்தை இஸ்ஹான் வளர்ந்து விட்ட நிலையில், மீண்டும் டென்னிஸ் வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் தீவிரப் பயிற்சியில் சானியா ஈடுபட்டார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடந்த ஏடிபி அந்தஸ்து பெற்ற ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்சோனக்குடன் சேர்ந்து சானியா களமிறங்கினார்.

தர வரிசையில் இடம் பெறாத நிலையில் சானியா, நாடியா ஜோடி தொடக்கச் சுற்றில் இருந்து அபாரமாக விளையாடி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்று நடந்த மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் சீனா இணையான ஷாய் பெங், ஷாய் ஹாங் கூட்டணியை எதிர்கொண்டது இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா ஜோடி.

ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவின் ஷாய் பெங், ஷாய் ஹாங் ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற்கடித்தது சானியா, நாடியா ஜோடி.

சானியாவுக்கு இரட்டையர் பிரிவில் பெறும் 42-வது பட்டம் இதுவாகும். கடந்த 2007-ம் ஆண்டு இரட்டையர் பிரிவில் பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானியே மாட்டெக்குடன் சேர்ந்து சானியா முதல் பட்டத்தை வென்றார். அதன்பின் இரட்டையர் பிரிவில் 42 பட்டங்களை சானியா வென்றுள்ளார்.

வெற்றி பெற்ற சானியா, நாடியா ஜோடிக்கு ரூ.9.64 லட்சம்( 13,580 டாலர்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x