

52 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று ஃபினிஷர் ரோலில் இறங்கி லோகேஷ் ராகுல் பின்னி எடுக்க இந்திய அணி வெற்றி ஸ்கோரான 340 ரன்களை எட்டியது. இதனை ஆஸ்திரேலியாவினால் ஒரு போதும் வெற்றிகரமாக துரத்த முடியாது என்பது அப்போதே முடிவான விஷயமானது.
நல்ல பார்மில் இருக்கும் ராகுலுக்கு உதவியது இந்த மட்டைப் பிட்ச்தான், ஆஸி.யை வீழ்த்த இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி பகலில் ரன்கள் விளாசும் பிட்ச், 300-310 ஸ்கோர் பிறகு போகப்போக பிட்சில் பந்துகள் மெதுவாகவும் தாழ்வாகவும் வர ஸ்பின்னர்க்ள் பார்த்துக் கொள்வார்கள், நேற்று ஜடேஜா அதியற்புதமாக வீசினார், குல்தீப் யாதவ் எதிரணியினரின் ரன் விகித நெருக்கடியில் விக்கெட் எடுப்பவர், ஆனால் ஜடேஜா அப்படியல்ல, முதல் போட்டியிலும் கூட ஜடேஜா நன்றாக வீசினார். ஒருவேளை அஸ்வின் இருந்தால் ஆஸ்திரேலியா இன்னும் முன்னமேயே மடிந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தன் புதிய ரோல் பற்றி ராகுல் கூறியதாவது: இந்த டவுனில் இதைவிட சிறந்த தொடக்கம் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரோல், வேறுபட்ட பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப்படுகின்றன, ஆனால் நான் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுச் செய்கிறேன்.
5ம் நிலையில் இறங்குவது நிச்சயம் வித்தியாசமான ஒன்று, நான் இறங்கும்போது 2 பந்துகள் பார்த்து விட்டு அடிக்க வேண்டியதுதான் என்று எண்ணினேன். விராட் கோலி களத்தில் ஆடி வந்ததால் அவரிடம் பேசினேன், அவரும் பந்து மட்டைக்கு நன்றாக வருகிறது என்று க்ளூ கொடுத்தார். அதன் பிறகு மனதில் எந்த ஒரு தடையும் இல்லை பந்து மட்டையும்தான்.
கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவுக்காக கீப் செய்தேன், எனவே என் கீப்பிங் மூலம் பவுலர்களை மகிழ்ச்சியாக வைப்பேன் என்று நம்புகிறேன், என்றார் கே.எல்.ராகுல்.