Published : 18 Jan 2020 10:01 AM
Last Updated : 18 Jan 2020 10:01 AM

நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்; வெளியில் பதற்றத்திற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது: விராட் கோலி 

மும்பை போட்டியில் 3ம் நிலையை ராகுலுக்கு விட்டுக் கொடுத்து 4ம் நிலையில் இறங்கியதால் இந்திய அணி தோற்றது என்ற விமர்சனங்கள் எழ, இந்த டவுன் ஆர்டர் விஷயத்தை மறுபரிசீலனை செய்வதாக கோலி அன்று தெரிவித்தார்.

அதன்படி நேற்று மீண்டும் தன் பழைய நிலையான 3ம் நிலையில் இறங்கி 78 ரன்களை விளாசி ஒருங்கிணைப்பு செய்தது இந்திய அணியின் மற்ற வீரர்களையும் வழிநடத்தி குறிப்பாக தவண், ராகுல் ஆகியோரது ஆட்டத்தை வடிவமைக்க இந்திய அணி ஆஸி.க்கு எட்டாக்கனியான 340 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது.

இந்நிலையில் விராட் கோலி தன் 4ம் நிலை பற்றியும் ராகுல் பேட்டிங் பற்றியும் அணியின் உத்தி பற்றியும் ஆட்டம் முடிந்த பிறகு மனம் திறந்தபோது, “4ம் நிலையில் இறங்கியவுடன் பதற்றம் தொற்றிக் கொண்டது, நாம் சமூகவலைத்தள காலத்தில் வாழ்கிறோம். இங்கு உடனே பதற்றப் பொத்தான் சீக்கிரமே அழுத்தப்பட்டு விடுகிறது.

சிறந்த அணியை நாம் களமிறக்க வேண்டியுள்ளது, இன்று ராகுலைப் பார்த்தீர்கள். ஒருவரை விரைவில் அப்படியெல்லாம் தீர்ப்பு எழுதி விட முடியாது. 5ம் நிலையில் இறங்கி இந்த மாதிரி ரன்களைக் குவித்துள்ளார், சர்வதேச மட்டத்தில் கே.எல்.ராகுலின் அபார இன்னிங்ஸ் இது என்றே நான் கூறுவேன். முதிர்ச்சியும் இருந்தது கிளாசும் இருந்தது.

ஓய்வறையில் நாங்கள் என்ன முடிவெடுக்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம், வெளியே ஏகப்பட்ட பதற்றங்கள், கருத்துக்கள், இவை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. 3ம் நிலையில் இறங்கியது அணிக்கு நல்லதென்றால் எனக்கும் அதில் மகிழ்ச்சிதான்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவண் நம் சீரான ஆட்டக்காரர். தவணும், ரோஹித்தும் ரன்கள் குவித்தால் அது ஒட்டுமொத்த அணிக்கே நன்மையாகிறது. பவுலர்கள் மூவருமே யார்க்கர்களை பிரமாதமாக வீசினர்” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x