Published : 18 Jan 2020 08:23 AM
Last Updated : 18 Jan 2020 08:23 AM

புரோ லீக் ஹாக்கி: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்

ஆடவருக்கான எஃப்ஐஹெச் (சர்வதேச ஹாக்கி சம்மேளனம்) புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இன்று மோதுகிறது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம்,ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து,நியூஸிலாந்து, ஸ்பெயின் ஆகிய 9 அணிகள்கலந்து கொள்ளும் ஆடவருக்கான எஃப்ஐஹெச்புரோ லீக் ஹாக்கி தொடர் இன்று தொடங்குகிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்நாட்டில் இரு போட்டிகளையும், வெளிநாட்டில் இரு போட்டிகளையும் விளையாடும்.

இந்த வகையில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா தனது சொந்த மண்ணில் 3-வது இடத்தில் உள்ள நெதர்லாந்துடன் இன்று முதல் ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதே மைதானத்தில் இரு அணிகளும் நாளை மீண்டும் பலப்பரீட்சை நடத்தும்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான மோதலை தொடர்ந்து பிப்ரவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் உலக சாம்பியனான பெல்ஜியம் அணிக்கு எதிராக இந்திய அணி மோதுகிறது. இதைஅடுத்து 22 மற்றும் 23-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியையும் சந்திக்கிறது இந்திய அணி.

இதன் பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது இந்திய அணி. ஜெர்மனிக்கு எதிரான ஆட்டங்கள் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்கள் மே 2, 3-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது. வெளிநாட்டு ஆட்டங்களுக்கு பின்னர் மே 23 மற்றும் 24-ம் தேதிகளில் புவனேஷ்வரில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது.

அதைத் தொடர்ந்து அர்ஜென்டினா சென்றுஅந்த அணிக்கு எதிராக ஜூன் 5, 6-ம் தேதிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்களை முடித்துக்கொண்டு இந்திய அணி ஸ்பெயின் செல்கிறது. அங்கு அந்த அணியுடன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்குவதில் இந்திய அணி வீரர்கள் தீவிர முனைப்பு காட்டக்கூடும். மேலும் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

கடைசியாக இரு அணிகளும் மோதிய 10 ஆட்டங்களில் நெதர்லாந்து 5 ஆட்டத்திலும், இந்தியா 4 ஆட்டத்திலும் வெற்றிகளை பதிவு செய்தன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது.

இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கிரஹாம் ரீட் கூறும்போது, “புரோ லீக்கில் எங்களது முதல் 3 மோதல்களும் உலக தரவரிசையில் முதல் 3 இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் தொடரை சிறந்த முறையில் தொடங்குவது மிகவும் முக்கியம். ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியாக இந்த தொடரை கருதுகிறோம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x