Published : 17 Jan 2020 22:27 pm

Updated : 17 Jan 2020 22:27 pm

 

Published : 17 Jan 2020 10:27 PM
Last Updated : 17 Jan 2020 10:27 PM

84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸி: திருப்புமுனை குல்தீப், ஜடேஜா; இந்தியா அபார வெற்றி:ராஜ்கோட் ராசி பலித்தது

rajkot-odi-india-level-series-with-36-run-win

ராஜ்கோட்

திருப்பு முனை ஏற்படுத்திய குல்தீப் யாதவ் , ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு, ஷமி எடுத்த முக்கிய விக்கெட்டுகள் ஆகியவற்றால் ராஜ்கோட்டில் இன்று நடந்த 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் சேர்த்தது. 341 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருது வென்ற ராகுல்

ராகுல் ஆட்டநாயகன்

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. அதிரடியான பேட்டிங், ஒரு ஸ்டெம்பிங், கேட்ச் என அசத்திய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பந்துவீ்ச்சுக்கு வெற்றி

இந்திய அணியின் பந்துவீ்ச்சுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் இதைக் குறிப்பிட வேண்டும். அதிலும் ஜடேஜா வீழ்த்திய லாபுஷேன் விக்கெட், குல்தீப் எடுத்த ஸ்மித், அலெக்ஸ் காரே விக்கெட்டுகள் ஆகியவைதான் ஆட்டத்தின் போக்கையை மாற்றி அமைத்தன.

அதன்பின் ஷமியின் 44-வது ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள், ஷைனியின் 47-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் ஆகியவை ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பின.

பேட்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக ஷிகர் தவண் ஒரு ஆண்டுக்குப்பின் அடுத்தடுத்து இரு அரைசதங்கள் அடித்தது. கோலி தனக்கே உரிய3-வது இடத்தில் இறங்கி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது முத்தாய்ப்பு.

அதிலும் கே.எல்.ராகுல்தன்னால் எந்தஇடத்திலும் களமிறங்கி தன்னால் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக நடுவரிசையில் இறங்கி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே மழையில் நனைந்த காகிதம் போல் 'சப்'பென்று ஆட்டமிழந்தது வேதனை.

ரோஹித் சாதனை

இந்த ஆட்டத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தாலும், புதிய சாதனையுடனே வெளியேறினார். மிகக் குறைந்த இன்னிங்ஸில் வேகமாக 7 ஆயிரம் ரன்களை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் எனும் மைல்கல்லை ரோஹித் எட்டினார். இதற்கு முன்னர் இந்தியத் தரப்பில் சச்சின், சேவாக், கங்குலி ஆகியோர் எட்டிய நிலையில் 4-வது பேட்ஸ்மேனாக ரோஹித் இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஹசிம் அம்லா (147), சச்சின் (160), திலகரத்னே தில்சன் (165), சவுரவ் கங்குலி (168) ஆகிய இன்னி்ங்ஸ்களில்தான் 7 ஆயிரம் ரன்களை எட்டினர். ஆனால், ரோஹித் சர்மா 137 இன்னிங்ஸ்களிலேயே 7 ஆயிரம் ரன்களை எட்டி புதிய வரலாறு படைத்தார்.

அதீதமான தன்னம்பிக்கையா
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது பேட்ஸ்மேன்களின் மீது அதிதமான வைத்த நம்பிக்கை சில நேரங்களில் இதுபோன்ற தோல்விக்கு காரணமாகி விடுகிறது. டாஸ் வெல்லும் அனைத்தும் நேரத்திலும் சேஸிங் செய்வது சரியில்லை என்பதை இந்த முடிவு உணர்த்தியுள்ளது.

220 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி கடைசி 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்துள்ளது.

ராஜ்கோட் ராசி

அதிலும் குறிப்பாக ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிதான் வென்றுள்ளது. இந்த முறையும் அதே ராசி இந்தியாவுக்கு பலித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு முன் இந்தியா இதே மைதானத்தில் மோதிய இரு ஆட்டங்களிலும் சேஸிங் செய்து தோற்றுள்ளது. இந்தமுறை முதலில் பேட் செய்து வென்றுள்ளது.

வார்னருக்கு அதிர்ச்சி
341 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரோன் பிஞ்ச், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஷமி வீசிய 4-வது ஓவரில் கவர்திசையில் வார்னர் தூக்கி அடிக்க அதை ஒற்றைக் கையில் மணிஷ் பாண்டே அருமையாக கேட்ச் பிடித்து வார்னரை அதிர்ச்சி அடைய வைத்தார். வார்னர் 15 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்

அடுத்து வந்த ஸ்மித், ஆரோன் பிஞ்ச்சுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஷமி வீசிய 9வது ஓவரில் பிஞ்ச் இரு பவுண்டரிகளும், ஷைனி வீசிய 10-வது ஓவரில் ஸ்மித் 3 பவுண்டரிகளும் அடித்து ஸ்கோரை உயர்த்தினர்

இருவரையும் பிரிக்க ஜடேஜா வரவழைக்கப்பட்டார். ஜடேஜா வீசிய 16-வது ஓவரில் ராகுல் மூலம் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு பிஞ்ச் 33 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.

மிரட்டல் கூட்டணி

அடுத்து லாபுஷேன் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அசத்திய லாபுஷேன் மிகவும் நேர்த்தியாக ஆடினார். சிறப்பாக ஆடிய ஸ்மித் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் ஆட்டம் ஆஸியின் பக்கம் சாயத் தொடங்கியது.

ஜடேஜா வீசிய 31-வது ஓவரில் மிட்ஆப் திசையில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து லாபுஷேன் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரின் விக்கெட்டை எதிர்பார்த்த ரசிகர்கள் லாபுஷேன் ஆட்டமிழந்ததும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து களமிறங்கிய காரே, ஸ்மித்துடன் இணைந்து சில அதிரடியான ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார். ஸ்மித்தும் சதத்தை நோக்கி மெல்ல நகர்ந்தார்.

திருப்புமுனை குல்தீப்

குல்தீப் யாதவ் வீசிய 38-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 2-வது பந்தில் காரே 18 ரன் சேர்த்திருந்தபோது எக்ஸ்ட்ரா கவரில் அடித்த ஷாட்டை கோலி அருமையாக கேட்ச் பிடிக்க காரே வெளியேறினார். அடுத்து டர்னர் களமிறங்கினார்.

அதே ஓவரின் 5-வது பந்தை ஸ்மித் சந்தித்தார். கூக்ளி முறையில் வீசப்பட்ட அந்த பந்தை ஸ்மித் வெட்டி ஆட முயன்ற போது பேட்டில் பந்துபட்டு போல்டாகியது. ஸ்மித் 98 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும்.

2-வது முயற்சி

அதன்பின் ஆட்டத்தை இந்தி்ய வீரர்கள் தங்கள் வசம் திருப்பினர். ஆஸ்டன் அகரும், டர்னரும் அதிரடியாக ஆட முயற்சித்தனர். ஷமி வீசிய 44-வது ஓவரில் மீண்டும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

ஷமி வீசிய முதல்பந்தில் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் டர்னர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸ் அடுத்தபந்தில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது

3-வது திருப்பம்

ஷைனி வீசிய 47-வது ஓவரில் அடுத்த திருப்பம் நடந்தது. ஷைனி, ஸ்டார்க் களத்தில் இருந்தனர். நிதானமாக பேட் செய்த அகர் 25 ரன்னில் ஷைனி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து ரிச்சார்ட்சன் களமிறங்கி ஒரு ரன் சேர்த்தார்.

மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஸ்டார்க் 6 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டதால் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

அடுத்து வந்த ஸம்பா, ரிச்சார்ட்ஸனுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 49-வது ஓவரில் ரிச்சர்ட்ஸன் 3 பவுண்டரி, ஒருசிக்ஸர் விளாசி 19 ரன்கள் சேர்த்தார்.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஸம்பா 6 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க ஆஸியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, குல்தீப், ஷைனி தலா 2 விக்கெட்டுகளை வீழத்தினர்.

வலுவான தொடக்கம்

முன்னதாக டாஸ் வென்ற ஆஸி.அ ணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அ ணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்திய அணி முதல் பவர் ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் சேர்த்தது.

இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில் ரோஹித் சர்மா 42 ரன்களில் ஸம்பா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 81 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

வார்னருக்கு மெய்சிலிர்க்க வைக்கும் கேட்ச் பிடித்த மணிஷ் பாண்டே

அடுத்துவந்த கோலி, தவணுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஷிகர் தவண், 60 பந்துகளில் அரை சதம் அடித்தார். லாபுஷேன், ஸம்பா, ஸ்டார்க் , ரிச்சார்ட்ஸன் ஆகியோரின் பந்துவீச்சை இருவரும் நொறுக்கி எடுத்தனர். விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் அடித்தார். சதத்தை நோக்கி முன்னேறிய ஷிகர் தவண் 96 ரன்களில் (13 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர் (7) ரன்னில் ஸம்பா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த கே.எல்.ராகுல், கோலியுடன் சேர்ந்தார்.

ராகுல் அதிரடி

தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடிய ராகுல் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். 38 பந்துகளில் ராகுல் அரை சதம் எட்டினார். ராகுலுக்கு ஒத்துழைத்து ஆடிய கோலி, 76 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 10 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னில் ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு ஜடேஜா, ராகுல் ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். 6-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் ரன் அவுட் ஆகினார். 52 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட 80 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 90 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்தது.

ஜடேஜா 20 ரன்னிலும், ஷமி ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஸம்பா 3 விக்கெட்டுகளையும், ரிச்சார்ட்ஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்


Rajkot ODIIndia level seriesNdia beat ausShikhar DhawanKL RahulKuldeepWarnerKl rahulஇந்தியா வெற்றிகுல்தீப் யாதவ்ஜடேஜாகே.எல். ராகுல்விராட்கோலி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author