

ஓவலில் வியாழனன்று தொடங்கிய 5-வது, இறுதி ஆஷஸ் டெஸ்ட், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் இறுதி டெஸ்ட்டும் ஆகும்.
இதில் சற்று முன் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 15 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரிசையாக நின்று கரகோஷம் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தனர்.
ஆட்டத்தின் 55-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீச 4-வது பந்து அவுட் ஸ்விங் ஆக கிளார்க் அதனை தொட்டார் பட்லரிடம் கேட்ச் ஆனது, தர்மசேனா அவுட் என்றார்.
எதிர்முனையில் இருந்த அடுத்த கேப்டன் ஸ்மித்துடன் ஆலோசனைக்குப் பிறகு மேல்முறையீடு செய்தார். ஹாட்ஸ்பாட்டில் எதுவும் தெரியவில்லை, டிவி நடுவர், ‘தர்மசேனா உங்களது முடிவுக்கு விட்டுவிட்டோம்’ என்று கூறினார், இதனால் தர்மசேனா அவுட் செல்லுபடியாக மைக்கேல் கிளார்க் தனது கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 15 ரன்களுக்கு வெளியேறினார்.
29 பந்துகளைச் சந்தித்த கிளார்க் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக டாஸ் வென்ற அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார். ராஜர்ஸ் (43), வார்னர் (85) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 110 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ராஜர்ஸ், மார்க் உட் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். அதுவரை நன்றாக கணித்து ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை ஆடிவந்த ராஜர்ஸ் கவனச் சிதறல் காரணமாக வெளியே போகும் பந்தை தொட்டார், இவருக்கும் இது கடைசி டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் வார்னர் 131 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 85 ரன்களில் இருந்த போது மொயீன் அலி பந்தை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த லித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தற்போது ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இன்னமும் 29 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஸ்மித் 51 ரன்களுடனும், ஆடம் வோஜஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் உட், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.