Last Updated : 17 Jan, 2020 04:16 PM

 

Published : 17 Jan 2020 04:16 PM
Last Updated : 17 Jan 2020 04:16 PM

ரபாடா கடைசி டெஸ்ட்டில் விளையாடத் தடை: மைக்கேல் வான் சாடல்

போர்ட் எலிசபெத் நகரில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை ஆட்டமிழக்கச் செய்து கிண்டல் செய்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடக்கிறது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.

3-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் ஜோ ரூட் 27 ரன்கள் சேர்த்திருந்தபோது ரபாடாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ரூட்டை ஆட்டமிழக்கச் செய்து அவரைக் கிண்டல் செய்யும் விதமாக ரபாடா சைகை செய்தார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை கிண்டல் செய்த ரபாடா : படம் உதவி ட்விட்டர்

இதுகுறித்து கள நடுவர்கள் இருவரும், ரபாடாவின் செயல் குறித்துப் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்டிடம் புகார் செய்தனர். இந்தப் புகார் குறித்து முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் ரபாடாவிடன் போட்டி நடுவர் பைகிராப்ட் விசாரணை நடத்தினார்.

அப்போது தன் மீதான குற்றத்தை ரபாடா ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததையடுத்து, அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே ரபாடா 4 மைனஸ் புள்ளி பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் ஐசிசி ஒழுங்கு விதிகள்படி சர்வதேசப் போட்டியின்போது எதிரணி வீரரை ஆத்திரமூட்டும் வகையில் செயல்கள் செய்வது, பேசுவது போன்றவை குற்றமாகும். அவ்வாறு செய்த ரபாடாவுக்கு கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்குத் தடை விதித்து போட்டி நடுவர் உத்தரவிட்டார்.

ரபாடாவின் செயல் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டர் பதிவிட்ட கருத்தில், "எதிரணியில் மிகச்சிறந்த வீரர் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரபாடாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது முட்டாள்தனமானது. பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்குத் தண்டிக்கப்படவில்லை, ஆனால், விக்கெட் வீழ்த்தியதைக் கொண்டாடியதற்கு இதுபோன்ற கடினமான தண்டனையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x