Published : 17 Jan 2020 01:39 PM
Last Updated : 17 Jan 2020 01:39 PM

டாஸ் வென்றது ஆஸி.: இந்திய அணியில் இரு மாற்றங்கள்; ஆடுகளம் யாருக்கு சாதகமானது?

ராஜ்கோட்டில் இன்று பகலிரவாக நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட் நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட்டில் பந்துபட்டு காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த்துக்கு பதிலாக ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் எம்.எஸ். பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் விளையாடும் 11 வீரர்களில் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் ஷைனியும், ரிஷப் பந்துக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக மணிஷ் பாண்டேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆடுகளம் எப்படி

ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானமாகும். பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரி என்று சொல்லலாம், தட்டையான ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எழும்பி பேட்ஸ்மேனை நோக்கி வரும். சுழற்பந்து வீச்சு ஒத்துழைக்கும் அளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைக்காது.

இதுவரை இங்கு 2 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி மோதிய இரு ஆட்டங்களிலும் இந்திய அணி சேஸிங் செய்து தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x