Published : 17 Jan 2020 10:43 AM
Last Updated : 17 Jan 2020 10:43 AM

பந்து வீச மிகவும் கடினமான வீரர் விராட் கோலி: ஆடம் ஸாம்பா கருத்து 

மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய கேப்டன் விராட் கோலியை முக்கியக்கட்டத்தில் வீழ்த்தியதும் ஒரு காரணமாகும்.

அத்துடன் அவர் 4வது முறையாக விராட் கோலியை வீழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது இந்தியாவில் இத்தகைய வீரருக்கு பவுலிங் செய்யும் போது நமக்கு கொஞ்சம் ‘கேரக்டர்’ தேவை. பவுண்டரி, சிக்சர் அடிக்கப்படும் போது நாம் துவண்டு விடக்கூடாது என்பதே தான் கற்றுக் கொண்ட பாடம் என்றார் ஸாம்ப்பா.

விராட் கோலி மீதான தன் வெற்றி குறித்து ஆடம் ஸாம்ப்பா கூறும்போது, “தாக்குதல் அணுகுமுறை தேவை. நாம் கொஞ்சம் பம்மி தற்காப்பு உத்திக்குச் செல்லும் போது அவர் நம் மீது ஏறி உட்கார்ந்து விடுவார். இந்தியாவில் இத்தகைய வீரர்களுக்கு எதிராக ஆடும்போது முக்கியமானது என்னவெனில் கொஞ்சம் கேரக்டருடன் வீச வேண்டும்.

நம் பந்துகள் பவுண்டரிகள் அடிக்கப்படும் என்பது தெரிந்திருந்தாலும் அது நம்மை பாதிக்கும் வகையில் விட்டுவிடக் கூடாது. விராட் கோலியை நான் சில சமயங்களில் வீழ்த்தியுள்ளேன் என்பதில் ஒன்றுமில்லை. இருப்பினும் அவர் என் பந்து வீச்சில் 100 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினம். 4 முறை வீழ்த்தியுள்ளேன், ஆனாலும் மோசமான பந்துகளை அவர் விளாசும் போது நாம் அதனால் பாதிக்கப்பட்டோம் எனில் நம் மீது அவர் இன்னும் கூடுதலாக ஏறி அமர்ந்து விடுவார்.

நான் வீசியதிலேயே மிகவும் கடினமான ஒரு வீரர் என்றால் அது விராட் கோலிதான். ராஜ்கோட் போட்டியில் அவர் மேலும் உத்வேகத்துடன் என்னை எதிர்கொள்வார் என்றே கருதுகிறேன். பெரிய சவால் காத்திருக்கிறது” என்றார்.

ஸாம்ப்பா கூறுவது என்னவெனில் அன்று மும்பையில் விராட் கோலி இவரை சிக்ஸ் அடித்தார், ஆனால் அதே ஓவரிலேயே கோலியை பெவிலியன் அனுப்பினார் ஸாம்ப்பா.

ஸாம்ப்பா மேலும் கூறும்போது, “விராட் கோலி லெக் ஸ்பின் பந்து வீச்சுக்கு இறங்கியவுடன் கொஞ்சம் தடுமாறுவார் என்று எங்களுக்குத் தெரியும். அவர் அருமையாகத் தொடங்கக் கூடியவர் அன்று மும்பையில் கூட அவர் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஓட்டம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை அவர் ஆடும் கவர் ட்ரைவ்கள் ஆகியவை அவர் கிரீசுக்கு வரும்போது என்ன மாதிரியான ஆற்றலைக் கொண்டு வருகிறார் என்பதை அறிவிக்கிறது.

எனவே அவருக்கு எதிராக திட்டமிடுதல் அவசியம், எனவே லெக் ஸ்பின்னை அவரை விரைவில் எதிர்கொள்ளச் செய்தோம், 2வது போட்டியில் வேறு திட்டமிடுவோம்” என்றார் ஆடம் ஸாம்ப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x