

ஐசிசி உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஒரேநாளில் சமூகவலைத்தளத்தில் நட்சத்திரமாக உலா வந்த இந்திய அணியின் சூப்பர் ரசிகையான 87 வயது சாருலதா படேல் காலமானார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்தித்தையடுத்து சமூகவலைத்தளங்களில் சாருலதா பாட்டியின் வீடியோக்கள் வைரலானது வரலாறு. ஆனால் இன்று அந்த சாருலதா பாட்டி நம்மிடையே இல்லை.
இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்தில் சாருலதா பாட்டியின் வாரிசுகள் வெளியிட்டுள்ள செய்தியில் “கனத்தை இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவெனில் எங்களுடைய அழகான பாட்டி 13/01, மாலை 5.30 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்து இயற்கை எய்தினார். இவர் இனிமையானவர். சிறு சிறு விஷயங்கள் சிறிதாகவே வரும். எங்கள் பாட்டி உண்மையில் மகிழ்ச்சி தருபவள். உண்மையில் அசாதாரணமானவர். கடந்த ஆண்டு அவருக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையக் காரணமான உங்கள் அனைவருக்கும் நன்ற்? தன் மீது விழும் கவனம் அவருக்குப் பிடிக்கும்.
விராட் கோலிக்கு மிகப்பெரிய நன்றி, உங்களால் அவர் மேலும் தன்னை சிறப்பு வாய்ந்தவராக உணரச் செய்து விட்டீர்கள். நீங்களும் ரோஹித் சர்மாவும் அவரது வாழ்நாளின் சிறந்த தினத்தை அவருக்கு அளித்தீர்கள், எங்கள் பாட்டி இதனை அடிக்கடி இதனைக் கூறிக்கொண்டேயிருந்தார். அவரது ஆத்மாவுக்கு சிவபெருமான் சாந்தியளிக்கட்டும், நாம் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்.
விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் பாட்டியின் சந்திப்பினால் நெகிழ்ச்சியடைந்ததோடு, கடைசி குரூப் மேட்சான இலங்கைக்கு எதிராக சாருலதா பாட்டி குடும்பத்தினருக்கு டிக்கெட்டுகளையும் ஸ்பான்சர் செய்தார் விராட் கோலி. பிசிசிஐ டிக்கெட்டுக்கு ஸ்பான்சர் செய்தது. பிறகு, ‘அன்புக்குரிய சாருலதாஜி உங்கள் அன்பையும் பற்றுதலையும் நினைத்தால் உத்வேகம் பொங்குகிறது, குடும்பத்துடன் போட்டியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம் ’ என்று பாட்டிக்கு மெசேஜும் செய்தார்.
இந்நிலையில் பிசிசிஐ தன் ட்விட்டரில் மறைந்த சாருலதா பாட்டிக்கு அஞ்சலி செலுத்துகையில், “டீம் இந்தியா சூப்பர் ஃபேன் சாருலதா படேல்ஜி எப்போதும் எங்கள் இருதயத்தில் நிறைந்திருப்பார், கிரிக்கெட் மீதான அவரது நேயம் எங்களை தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளது.