

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆண்டின் சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான மதிப்பு மிக்க சர் கேரி சோபர்ஸ் விருதைப் பெற்றார். ரோஹித் சர்மா ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 84 ரன்களை எடுத்து பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார். மொத்தம் 719 ரன்களையும் 12 விக்கெட்டுகளையும் இந்த விருதுக்கான வாக்கெடுப்புக் காலகட்டத்தில் 20 ஒருநாள் போட்டிகளில் ஸ்டோக்ஸ் பெற்றிருந்தார்.
இதே காலக்கட்டத்தில் 11 டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் 821 ரன்களையும் விளாசியுள்ளார். ஆஷஸ் தொடர் த்ரில்லர் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 135 நாட் அவுட் என்ற பிரையன் லாரா ரக மேட்ச் வின்னிங் இன்னின்ஸும் ஸ்டோக்ஸின் பெருமைகளில் அடங்கும்.
ஆஸ்திரேலியாவில் பாட் கமின்ஸ் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தீபக் சாஹர் சிறந்த டி20 ஆட்டத்திற்கான விருதைப் பெற்றார், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷான் வளரும் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். ஸ்காட்லாந்தின் கைலி குயெட்சர் சிறந்த அசோசியேட் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விருது அளிக்கப்பட்டுள்ளது, காரணம் ஐசிசி உலகக்கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்த போது அவர்களை நோக்கி ஸ்மித்தை இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நெகிழ்ச்சிச் சம்பவம் ஐசிசி நடுவர்கள் மனதைக் கவர்ந்த சம்பவமானதால் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடுவராக இங்கிலாந்தின் இல்லிங்வொர்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.