Published : 14 Jan 2020 18:09 pm

Updated : 14 Jan 2020 18:09 pm

 

Published : 14 Jan 2020 06:09 PM
Last Updated : 14 Jan 2020 06:09 PM

அப்படியிப்படி ரன்களைத் தேற்றிய இந்தியா; மீண்டும் தவண் அதிக ஸ்கோர்: 255 ரன்களுக்கு ஆல் அவுட் 

mumbai-odi-india-australia-dhawan-kohli-starc-cummins-rahul-india-255-all-out

மும்பையில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. கேப்டன் ஏரோன் பிஞ்சினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி போராடி 255 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுமாரான தொடக்கம் கண்டு பிறகு மிடில் ஓவர்களில் சரிவு கண்டு பிறகு பின்வரிசை வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்த்த ரன்களினால் இந்திய அணி 255 ரன்களை எடுத்து 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷிகர் தவண் மீண்டும் 74 ரன்களை அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராக எடுத்தார். 8 யார்க்கர்களை வீசிய மிட்செல் ஸ்டார்க் 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பனிப்பொழிவு இருக்குமானால் பந்து மட்டைக்கு சுலபமாக வரும் என்கிறார் ஸ்டார்க். 255 ரன்களை வைத்துக் கொண்டு ஆஸி.யைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது கோலியின் முன்னால் இருக்கும் சவால்.

பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமானதுதான், இலங்கை, வங்கதேசம், மே.இ.தீவுகள் போன்ற அணியின் பந்து வீச்சைச் சந்தித்து விட்டு திடீரென முற்றிலும் ஒரு தொழில் நேர்த்தியான பவுலிங், களவியூகத்துடனும், சரியான உத்திகளுடனும் கொண்ட ஒரு அணியை எதிர்கொள்வது இந்திய அணிக்குச் சிரமம் என்பது தெரிகிறது.

ஷிகர் தவண் விக்கெட்டை 74 ரன்களிலும் ரிஷப் பந்த் விக்கெட்டை 28 ரன்களில் கைப்பற்றியதன் மூலம் முக்கியத் தருணங்களில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாட் கமின்ஸ் மீண்டும் தான் ஏன் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று நிரூபித்து 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

2 அருமையான டைமிங் பவுண்டரிகளுடன் மிட்செல் ஸ்டார்க் ஓவரைத் தொடங்கினார் ரோஹித் சர்மா, ஒரு ரன் அவுட் வாய்ப்பும் அவருக்கு சாதகமாக அமைந்தது. பாட் கமின்ஸ் ஒரு மெய்டன் ஓவரை தவணுக்கு வீச ரோஹித்துக்கு கொஞ்சம் பிரஷர் கூடியது, மேலும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், ஒரு ரன் கூட எடுக்க முடியாத ஓவரை கமின்ஸ் வீசவில்லை. பந்துக்குரிய விதத்தில் தவண் ஆடவில்லை என்பதே, இதனால் அடுத்த ஓவரில் பெரிய ட்ரைவ் ஒன்றை அடிக்கப்போய் ரோஹித் ஸ்டார்க் பந்தில் வார்னரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ராகுலுக்காக தன் 3ம் நிலையை கோலி விட்டுக் கொடுத்தார், இது மிக மிக அபத்தம், அதன் பலன் தான் இந்திய அணி இன்று அனுபவித்தது. கிட்டத்தட்ட 9000 ரன்களை இந்த டவுனில்தான் கோலி அடித்துள்ளார். ஒரு சிறந்த வீரர் தன் டவுன் ஆர்டரை விட்டுக் கொடுப்பது பெரிய தியாகம் என்றெல்லாம் பார்க்கப்பட வேண்டியதில்லை, அதேபோல் இன்னொரு வீரரை ஊக்குவிக்கிறார் என்று பாசிட்டிவாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அணிதான் முக்கியம், ராகுலுக்குப் பதில் கோலி இறங்கி செட்டில் ஆகியிருந்தால் அணியின் ஸ்கோர் இன்னும் 30 ரன்கள் அதிகமாகக் கூட வந்திருக்கலாம்.

ராகுல் தன் பங்குக்கு தவறு எதுவும் செய்யவில்லை, ரோஹித் போன்ற பெரிய விக்கெட் விழுந்தவுடன் ராகுல் என்ன செய்ய முடியும்? நிதானித்து பிறகுதான் ஆட முடியும், ஆனால் விராட் கோலி ஆஸி, மனதில் அச்சத்தை ஏற்படுத்தியவர், அவர் இறங்கியிருந்தால் ஆஸ்திரேலியாவின் களவியூகம் மாறியிருக்கலாம், பந்து வீச்சு மாற்றமும் மாறியிருக்கலாம் ஆனால் ராகுல் இறங்கியதால் அந்த அச்சுறுத்தலிலிருந்து ஆஸ்திரேலியா விடுவிக்கப்பட்டது.

ஏனெனில் ஷிகர் தவண் 22 பந்துகளில் 3 ரன்கள் என்று அப்போது தடவிக்கொண்டிருக்கிறார், ராகுல் கொஞ்சம் சரளமாக ஆடினார், இருந்தாலும் கோலி கொடுக்கும் அச்சுறுத்தல் வேறு, ராகுல் வேறு.

ஆனால் ஷிகர் தவண் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டத்தொடங்கினார், அது மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர்களை எதிர்கொள்ள மேலேறி வந்து ஆடியதில் முடிந்தது, இதில் 2 பவுண்டரிகள் அவருக்கு வந்தது. கேன் ரிச்சர்ட்ஸனை மிட்விக்கெட் மேல் தூக்கி அடித்த பிறகே தவண் பிரமாதமாக ஆடத்தொடங்கினார். ஆஷ்டன் ஆகரை ஒரு பெரிய சிக்சரையும் அடித்தார் தவன். தவண் அடிக்க ஆரம்பித்தவுடன் ராகுலும் ரிஸ்க் எடுக்காமல் ஆட இருவரும் சேர்ந்து 22.4 ஓவர்களில் 121 ரன்களைச் சேர்த்தனர், ரன் விகிதம் இப்போதான் ஓவருக்கு 5 என்று அதிகரித்தது.

ராகுல் 61 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 4 பவுண்டரிகளுடன் ஆகர் பந்தில் கவரில் ஸ்மித் கையில் ஏந்திக்கொடுத்து வெளியேறினார். கூட்டணியை ஆகர் உடைத்தவுடனேயே பாட் கமின்ஸ் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 பந்துகளில் 74 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கமின்ஸ் வீசிய வேகம் குறைக்கப்பட்ட பந்தை முற்றிலும் ஏமாந்தார், பிளிக் செய்ய முயன்று ஆஃப் திசையில் கேட்ச் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

கோலி இறங்கியவுடன் நன்றாக அறிந்த பிஞ்ச், லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவை கொண்டு வந்தார். கோலி ஒரு பெரிய சிக்சரை அடித்தார் ஆனால் அதே ஸாம்ப்பா ஒவரில் வலது ரிஸ்டை அழுத்தி ஆட நினைக்க பந்து சரிவர வராமல் போக கோலியின் ட்ரைவ் ஸாம்பா கையிலேயே உட்கார்ந்தது 16 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார் 4வது முறையாக கோலியை ஸாம்பா மலிவாக வீழ்த்தினார்.

அடுத்ததாக ஸ்டார்க்கைக் கொண்டு வந்தார் பிஞ்ச், அவர் இந்திய பேட்ஸ்மென்களுக்கே காலங்காலமாக உள்ள பலவீனத்தைப் பயன்படுத்தினார், ஒரு பவுன்சர் அடுத்து ஒரு பந்தை உடலுக்குக் குறுக்காக வெளியே எடுக்க ஷ்ரேயஸ் அய்யர் எட்ஜ் செய்து வெளியேறினார். 134/1 என்ற நிலையிலிருந்து 164/5 என்று ஆனது இந்தியா, நல்ல வேளையாக 17 ஓவர்கள் மீதமிருந்தன. இதில் ரிஷப் பந்த் (28), ஜடேஜா (25), தாக்கூர் 13, ஷமி 10, குல்தீப் யாதவ் 17 என்று தேற்றித் தேற்றி ஸ்கோரை 255 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஆஸ்திரேலியா தற்போது 14/0 என்று ஆடி வருகிறது.


Mumbai ODI India-Australia Dhawan Kohli Starc CumminsRahulIndia 255 all outஅப்படியிப்படி ரன்களைத் தேற்றிய இந்தியா; மீண்டும் தவண் அதிக ஸ்கோர்: 255 ரன்களுக்கு ஆல் அவுட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author