Published : 13 Jan 2020 05:11 PM
Last Updated : 13 Jan 2020 05:11 PM

ஒட்டுமொத்தமாக ஆஸி. ஆதிக்கம்: 2013-லிருந்து இந்தியா சரிசமம்- கடந்த தொடர் தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா? - மும்பையில் நாளை முதல் போட்டி

கடந்த முறை இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலியா தொடரை 3-2 என்று கைப்பற்றியது ஒருசிலருக்கு மறந்திருக்கலாம், ஆனால் விராட் கோலி மறக்க மாட்டார், ஏரோன் பிஞ்ச் மறக்க வாய்ப்பில்லை.

சில நல்ல நினைவுகளுடன் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை நாளை, செவ்வாய்க்கிழமை மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் எதிர்கொள்கிறது. அதுவும் கடந்த தொடரில் 2 போட்டிகளில் தோற்று பிறகு எழுச்சி பெற்று தொடரை வென்றுள்ளது. கடந்த தொடரில் விராட் கோலி அணித்தேர்வில் பெரிய தவறுகளைச் செய்தார், ஒரு செட்டில்டு அணியை அவர் உருவாக்க முயற்சி செய்யவில்லை அப்போது, ஆனால் இப்போதைய அணி நல்ல நிலையில் உள்ளது.

டாப் ஆர்டர் பார்மில் உள்ளது, ஷிகர் தவண் கடைசியாக உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியப் பாணி பிட்சில் சதம் கண்டது அவருக்கு சாதகப் பலன்களையும் பலங்களையும் அளித்தது. உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம் உதை வாங்கிய பிறகு தற்போது முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. நிச்சயம் அந்த அணி சரியான பார்மில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை, இந்திய அணி இந்தியாவில் அசைக்க முடியாத அணியாகத் திகழ்கிறது, ஆனால் ஆஸி. இங்கு வந்து நம்மை வென்றுள்ளதால் இந்தத் தொடர் ஒரு பொறிபறக்கும் தொடராக அமையும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு வாய்ப்பில்லை.

இதுவரை இந்தியா-ஆஸி. தொடர் ஒரு புள்ளி விவரப்பார்வை:

மொத்தமாக 77 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வாகை சூட, இந்திய அணி 50 முறை வென்றுள்ளது.

இந்தியாவில் ஆடியதிலும் 29 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது, இந்திய அணி 27 போட்டிகளில் வென்றுள்ளது.

ஆனால் 2013லிருந்து இந்த காட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இரு அணிகளும் தலா 13 போட்டிகளில் வென்றுள்ளது.

2013-லிருந்து இந்தியாவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 9 முறை வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 6 முறை வென்றுள்ளது.

இரு அணிகளும் சமீபமாக அடிக்கடி மோதி வருவதால் இரு அணிகளுக்கும் பரஸ்பரம் எதிரணியின் பலம், பலவீனங்கள் நன்கு தெரியும்.

2013 தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் 28 முறை மோதியதில் இரு அணிகளும் 13 வெற்றிகளுடன் சமபலத்தில் இருக்கின்றனர்.

ஆஸி.க்கு எதிராக ரோஹித், கோலி, தவண் ஆகியோரின் ஆதிக்கம்:

எப்போதெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகிறார்களோ இந்திய டாப் 3 பேட்ஸ்மென்களான ரோஹித், தவண், கோலி பெரிய அளவில் ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்துள்ளனர். ரோஹித், கோலி இருவரும் ஆஸிக்கு எதிராக பெரிய சாதனைகளை வைத்துள்ளனர், ஷிகர் தவணும் இதில் சற்றுதான் பின்னால் உள்ளார்.

கோலி ஒரு சதம் எடுத்தாலும் ரோஹித் 2 சதங்கள் எடுத்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸி.க்கு எதிராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையான 9 சதங்கல் சாதனையைச் சமன் செய்கின்றனர், கோலி சச்சினை முந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2013 தொடக்கத்திலிருந்து ரோஹித் சர்மா ஆஸி.க்கு எதிராக 1844 ரன்கலை 27 இன்னிங்ஸ்களில் மிகப்பெரிய சராசரியான 76 ரன்கள் என்ற விகிதத்தில் குவித்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் ரோஹித் சர்மா ஆஸி பந்து வீச்சுக்கு எதிராக மட்டுமே 69 சிக்சர்களை விளாசியுள்ளார். சிக்சர்களில் அடுத்த இடத்தில் தோனி 22 சிக்சர்களுடன் இருக்கிறார். மொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் 70 சிக்சர்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 85 சிக்சர்களை அடித்ததற்குப் பிறகு ரோஹித் சர்மாதான் உள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் ஆஸி.க்கு எதிராக 7 சதங்களை ரோஹித் சர்மா எடுத்துள்ளார்.

விராட் கோலி 2013லிருன்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1463 ரன்களை 60.95 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஷிகர் தவண் 975 ரன்களை ஆஸி.க்கு எதிராக எடுத்துள்ளார். 2013 லிருந்து இந்த மூவர் கூட்டணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த ரன்களில் 58% ரன்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

2013-லிருந்து இந்திய-ஆஸ்திரேயா ஆடிய 28 போட்டிகள் குறித்த சில புள்ளி விவரங்கள்:

28 ஆட்டங்களில் மொத்தம் 25 போட்டிகளில் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்துள்ளது. (14 முறை ஆஸி. 11 முறை இந்தியா)

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 3030

அதிகபட்ச ஸ்கோர் 383

குறைந்தபட்ச ஸ்கோர் 202

சதங்கள் 35.

எனவே டாப் 3 யுடன் தற்போது ராகுலும் இணைந்திருப்பதால், அய்யரும் இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு இவர்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தால்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.

இந்திய அணியின் கீழ்-நடுவரிசை பேட்டிங்கின் பலவீனம்:

நம்பர் 4 பற்றி இந்திய அணி நிர்வாகம் அதிகம் பேசி, அதிகம் முயன்று இதில் ராயுடுவை காவு கொடுத்து கடைசியாக அய்யரில் முடிந்துள்ளது. ஆனால் பின் நடுவரிசைப் பலவீனம் தோனி சென்ற பிறகே வெட்ட வெளிச்சமாகியுள்ளது, பாண்டியாவின் காயம் ரிஷப் பந்த்தின் நம்பமுடியாத தன்மை ஆகியவை இந்திய கீழ் நடுவரிசையை பலவீனமாக்கியுள்ளது. இதனால் 6 -ம் நிலை மற்றும் கீழே இந்திய அணி தடுமாறி வருகிறது.

கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை இதில் நம்புவது கடினமே. ஜடேஜாவின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியே ஏனெனில் அவர் அடிக்கடி பேட்டிங்கில் களமிறங்க முடிவதில்லை. ஜாதவ்வும் ஜடேஜாவும் தான் இறுதி ஓவர்களில் ரன்களை எடுக்கின்றனர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களால் ஓரளவுக்கு மேல் அதிரடியாக ஆட முடியவில்லை என்பதுதான் உண்மை.

எனவே இந்திய அணி 30-32 ஓவர்களில் 200 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விடுகிறது என்றால் பின்னால் நின்று ஒரு பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோஐ 300 ரன்களுக்குக் கொண்டு செல்ல ஆளில்லை, இதுதான் மே.இ.தீவுகள் ஒரு போட்டியில் நம்மை புரட்டி எடுத்து வெல்ல காரணமானது, மாறாக ஆஸ்திரேலியாவில் அலெக்ஸ் கேரி இருக்கிறார்.

இந்த முறை வார்னர், ஸ்மித், லபுஷான், டாப் ஆர்டரில் பிஞ்ச் ஆகியோர் வெளுத்துக் கட்ட வாய்ப்புள்ளது, காரணம் பிளாட் பிட்ச் மற்றும் எல்லைக்கோடு சிறியதாக உள்ள மைதானங்கள் (மும்பை, ராஜ்கோட், பெங்களூரு).

பும்ரா காயத்திலிருந்து வந்திருப்பதனால் அவரை அடித்து ஆடி அச்சுறுத்த நிச்சயம் ஆஸி. அணி டாப் ஆர்டர் திட்டங்களை வைத்திருக்கும், பும்ரா கவனமாக இருக்க வேண்டும். ஷமி அனுபவசாலி அதனால் பிரச்சினையில்லை. ஸ்பின் தரப்பில் வார்னர், ஸ்மித், லபுஷான், ஹேண்ட்ஸ்கம்ப், கேரி அனைவருமே வெளுத்து வாங்கக்கூடியவர்கள் ஆகவே விராட் கோலிக்குச் சவால்கள் காத்திருக்கின்றன.

மேலும் ஆஸ்திரேலியா அணியில் மூவர் கூட்டணியான பாட்கமின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் சிறந்தவர்களா இந்திய மூவர் கூட்டணி ரோஹித், தவண்/ராகுல், கோலி சிறந்தவர்களா என்பதற்கான கண்ணுக்கு விருந்தாகும் சவால் உள்ளது.

ஆட்டம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்திய அணி (உத்தேசமாக) : ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கோலி, ராகுல் (வி.கீ), அய்யர், கேதார் ஜாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப், மொகமது ஷமி, பும்ரா

ஆஸ்திரேலிய அணி: வார்னர், பிஞ்ச் (கேப்), ஸ்மித், லபுஷேன், ஹேண்ட்ஸ்கம்ப், கேரி (வி.கீ), ஆஷ்டன் ஆகர், கமின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், ஆடம் ஸாம்ப்பா

புள்ளி விவரங்கள்: நன்றி- ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x