Published : 12 Jan 2020 02:01 PM
Last Updated : 12 Jan 2020 02:01 PM

தன் 50வது சதத்தை இரட்டைச் சதமாக மாற்றிய புஜாரா: உயர் பட்டியலில் இணைந்தார்

ராஜ்கோட்டில் நடைபெறும் எலைட் ரஞ்சி டிராபி பி பிரிவு ஆட்டத்தில் கர்நாடகா பந்து வீச்சை புரட்டி எடுத்த புஜாரா தன் 50வது முதல் தர கிரிக்கெட் சதத்தை எடுத்ததோடு அதனை இரட்டைச் சதமாக மாற்றியுள்ளார்.

நேற்று 162 நாட் அவுட் என்று தொடங்கிய புஜாரா 2ம் நாளான ஞாயிறன்று உணவு இடைவேளை வரை 223 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். இவருடன் ஷெல்டன் ஜாக்சன் 150 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 378 ரன்களைச் சேர்க்க சவுராஷ்ட்ரா அணி உணவு இடைவேளையின் போது 411/2 என்று வலுவான நிலையில் உள்ளது. ஷெல்டன் ஜாக்சன் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாச புஜாரா 22 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று ஆடிவருகிறார்.

இதன் மூலம் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் உள்ளிட்டோர் அடங்கிய 9 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் 50 சதங்களுடன் நுழைந்துள்ளார்.

இதில் அலிஸ்டர் குக் 65 சதங்கள், இயன் பெல் 57 சதங்கள், ஹஷிம் ஆம்லா 52 சதங்கள், வாசிம் ஜாபர் 57 சதங்கள் ஆகியோர் அடங்கிய முதல்தர சாதனையாளர்கள் பட்டியலில் புஜாரா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் தர கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் 81 சதங்களுடன் முதல் 2 இடங்களில் உள்ளனர், ராகுல் திராவிட் 68 முதல் தர சதங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x