

புதுடெல்லியில் லால்பகதூர் சாஸ்திரி நினைவு சொற்பொழிவாற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து பேசினார்.
மாணவர்கள் போராட்டம், நாடு முழுதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “நாடு கொந்தளிப்பில் உள்ளது, நம் மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பதற்குப் பதிலாக தெருவில் இறங்கியுள்ளனர். தெருக்களில் இறங்கியதற்காக இவர்களில் பலர் தற்போது மருத்துவமனையில் இருந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையோர் வகுப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்று இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக இருக்கின்றனர். நாம் ஒரு தேசமாக உச்சத்தை எட்ட வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம். நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்பதை மறந்து விடக்கூடாது.
கிரிக்கெட் இதைத்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. நாங்கள் அனைவரும் ஒன்று சேரும் போது வெற்றிகளைப் பெற்றோம். கடந்த காலத்திலும் இந்தியா பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆனால் அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது.
தற்போதைய நெருக்கடிகளிலிருந்தும் நம் நாடு மீண்டு வலுவான தேசமாகும். நாம் ஒரு தேசமாக ஒற்றுமையுடன் இருந்தோமானால் உயரத்தை எட்ட முடியும்” என்றார்