Published : 12 Jan 2020 09:49 AM
Last Updated : 12 Jan 2020 09:49 AM

லாரஸ் விருது பட்டியலில் சச்சின்

லண்டன்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைக்கு லாரஸ் என்ற அமைப்பு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2019-ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை களுக்கான விருது வரும் பிப்ரவரி 17-ம் தேதி ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற உள்ளது. இதில் ‘விளையாட்டின் சிறந்த தருணங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வழங்கப்படும் விருதுக்கான தேர்வு பட்டியலில் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 பேரில் சச்சின் ஒருவர். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வாகை சூடியது. சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 6-வது முயற்சியில் உலகக் கோப்பையை கைகளால் தழுவியதை சுமார் 135 கோடி ரசிகர்கள் நேரலையில் கண்டுகளித்தனர்.

இந்திய அணி வெற்றி பெற்றதும் சச்சினை சக அணி வீரர்கள் தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். அப் போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்து சச்சினுக் கும் இந்திய அணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சச்சினை வீரர்கள் தோளில் சுமந்து வந்த தருணத்தையே லாரஸ் அமைப்பு விருதுக்கான தேர்வு பட்டியலில் இணைத்துள்ளது.

இந்த அழகான தருணத்தை ‘தேசத்தை தோளில் சுமப்பது’ என தலைப்பிட்டுள்ளது லாரஸ் அமைப்பு. இந்த விருதுக்கு வாக் கெடுப்பு ஆன்லைனில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை ரசிகர்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்குகள் பெறுபவர் 17-ம் தேதி பெர்லின் நகரில் நடைபெறும் விழாவில் விருதை பெறுவார்.

ஆன்ட்ரூ பிளின்டாப்

சச்சினுடன் இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆன்ட்ரூ பிளின்டாப்பும் பட்டியலில் உள்ளார். 2005-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஆட்டத்தின் அதிதீவிரமான சூழலில் ஆஸ்தி ரேலியாவை வீழ்த்தியது. அப்போது தனது அணியினருடன் வெற்றியை கொண்டாடு வதைவிட ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீயுடன் கை குலுக்கி ஆறு தல் தெரிவித்தார் பிளின்டாப். இந்த தருண மும் விருதுக்கான பட்டியலில் உள்ளது.

வாக்களிப்பது எப்படி?

www.laureus.com/vote website; என்ற இணைய தளத்தில் சென்று ரசிகர்கள் வாக்களிக்கலாம். இதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. வெற்றியாளரை தேர்வு செய்ய 3 நாக் அவுட் சுற்றுகள் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த சுற்றில் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள 20 பேரும் இருப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெறும் 10 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்பார்கள். 2-வது சுற்று வாக்கெடுப்பு 22-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறும். இதில் தேர்வாகும் 5 பேர் கடைசி கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்கள். வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் இந்த சுற்று பிப்ரவரி 3 முதல் 16 வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x