

புனேவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் 202 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி 123 ரன்களுக்கு சுருண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 0-2 என இழந்தது. தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா கூறியதாவது:
நாங்கள் 2-0 என முழுமையாக தோல்வியடைந்துள்ளோம். நான் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் டி 20 கிரிக்கெட்டில் நான் அனுபவம் உள்ள வீரர். ஆனால் இந்தத் தொடரில் ஒரு விக்கெட்டை கூட நான் கைப்பற்றவில்லை. இதனால் தான் நாங்கள் தொடரை இழந்த சூழ்நிலையில் உள்ளோம்.
டி 20 போட்டிகளில் இலங்கை அணியில்உள்ள வீரர்களில் அதிக அனுபவம் கொண்டவன் நான். வழக்கமாக விக்கெட்கள் கைப்பற்றக்கூடிய பந்து வீச்சாளர் என்பதால்விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடி எனக்கு இருந்தது. ஆனால் என்னை பொறுத்தவரையில் நாங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதல் 6 ஓவர்களுக்குள் ஒன்றிரண்டு விக்கெட்களை வீழ்த்தியாக வேண்டும்.
அதை நாங்கள் இந்தத் தொடரில் செய்யவில்லை. அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்மிகவும் முக்கியமானது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். டி 20 ஆட்டங்களில் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். எங்கள் அணி வீரர்களால் பேட் செய்ய முடியும், அதிரடியான ஷாட்களை அடிக்க முடியும். ஆனால் அவர்கள் ஆட்டத்தை கட்டமைப்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இதில் தான் அவர்கள் தேக்கம் அடைகின்றனர். கடந்த காலங்களில் சங்ககரா, ஜெயவர்த்தனே, தில்ஷான் ஆகியோருக்கு இன்னிங்ஸை எப்படி கட்டமைப்பது என்பது தெரிந்திருந்தது. தற்போது அணியில் உள்ள இளம் வீரர்கள்திறன் உள்ளவர்கள் தான். தங்களது ஷாட்களை விளையாட அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும், நிலைமையை கையாள வேண்டும். இந்த பகுதியில் அவர்கள் சுணக்கம் அடைகின்றனர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தால் நிலைமையை அவர்கள் கையாள்வார்கள். கேப்டனின் பணி எளிதாக இருக்கும். ஆனால் அந்த சவுகரியம் தற்போது எனக்கு கிடைக்கவில்லை. தற்போதுள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களை வழி நடத்துகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு லசித் மலிங்கா கூறினார். - பிடிஐ