

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவிவருகிறது. இதில் 24 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். மேலும் ஏரளாமான வன விலங்குகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானான ஷேன் வார்ன், தான் விளையாடிய காலத்தில் பயன்படுத்திய பேகி கிரீன் என்ற தொப்பியை ஏலத்தில் விட முடிவு செய்தார்.
இதன்படி நடைபெற்ற ஏலத்தில்ஷேன் வார்ன் பயன்படுத்திய தொப்பியை சுமார் ரூ.4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கிஏலம் எடுத்துள்ளது. இந்த தொகையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வரும் செஞ்சிலுவை சங்கத்துக்கு நேரடியாக சென்று சேரும் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் போது பேகி கிரீன் தொப்பி வழங்கப்படுகிறது. இது ஆஸ்திரேலிய வீரர்களின் பெருமைக்குரிய சின்னமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - ஏஎப்பி