

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் புதுமுக டெஸ்ட் நட்சத்திரம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் இடம்பெற்றுள்ளதையடுத்து 3 வடிவங்களிலும் விராட் கோலியை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தன் லட்சியத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரமாதமாக ஆடிவந்த உஸ்மான் கவாஜா இடத்தைத்தான் இவர் பிடித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கிரிக்கெட் இணையதளத்தில் லபுஷான் கூறியதாவது:
நான் அடைய விரும்பும் இடம் எதுவென்றால் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோரது இடமாகும். 5-6 ஆண்டுகளாகவே இவர்கள் எந்த ஒரு வடிவத்திலும் பிரமாதமாக ஆடி வருகின்றனர்.
இந்தக் கோடை கிரிக்கெட் தொடரில் நான் வெற்றியடைந்து விட்டேன், ஆனால் உண்மையான சவால் என்னவெனில் அனைத்து வடிவங்களில் ஆடும்போதும் இதே போன்ற சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக ரன்களைச் சேர்க்க வேண்டும்.
இந்தியாவில் ஆடுவது என்பது நாம் ஸ்பின் பந்து வீச்சை எப்படி ஆடுகிறோம் என்பதைப் பொறுத்தது. எனவே எனது திட்டங்களில் நான் தெளிவாக இருப்பது அவசியம்.
மிடில் ஆர்டரில் இறங்கி ஆடுவது என்பது வேகமாக ரன்களை ஓடி எடுப்பதில் உள்ள விஷயமாகும். நின்று ஆடிவிட்டால் பிறகு முடிவு ஓவர்களில் பெரிய ஷாட்களை ஆடலாம்.
மைக்கேல் ஹஸ்ஸியிடமிருந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெரிய பாக்கியம். ஒருநாள் போட்டிகளில் அவர் இன்னிங்ஸை தொடங்கும் விதம், கட்டமைக்கும் விதம் போட்டிகளை முடிக்கும் விதம் ஆகியவற்றை நான் என்னுடையதாக்கிக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக நானும் ஹஸ்ஸியும் ஒன்று என்று பொருளல்ல, என்றார்.