Last Updated : 09 Jan, 2020 11:07 AM

 

Published : 09 Jan 2020 11:07 AM
Last Updated : 09 Jan 2020 11:07 AM

தெ.ஆப்பிரிக்க டெஸ்ட்தொடர்: இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய பந்துவீச்சாளர் விலகல்

ஜேம்ஸ் ஆன்டர்ஸன்

லண்டன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காயத்தால் முக்கிய பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ் விலகிய நிலையில் இப்போது ஆன்டர்ஸனும் விலகியுள்ளார். ஆன்டர்ஸனுக்கு பதிலாக சோமர்செட் பந்துவீச்சாளர் கிரேக் ஓவர்டர்ன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன.

இதில் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் விளையாடும் போது ஆன்டர்ஸனுக்கு அவரின் விலா எலும்பில் வலி ஏற்பட்டது. இருப்பினும் அதைச் சமாளித்துப் பந்துவீசினார். போட்டி முடிந்தபின் ஆன்டர்ஸன் கேப்டவுன் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் மார்பு விலா எலும்பில் சிறு கீரல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

ஆஷஸ் தொடரின்போது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட ஆன்டர்ஸன் 5 மாத நீண்ட ஓய்வுக்குப்பின் தற்போது விளையாட வந்தார். ஆனால், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் மீண்டும் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பி்ல, " தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்து வர இருக்கும் 2 டெஸ்ட்போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் விளையாட மாட்டார். அவருக்கு மார்பு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க உள்ளார். அடுத்த சில நாட்களில் உயர் சிகிச்சைக்காக இங்கிலாந்துக்குச் செல்ல உள்ளார்" எனத் தெரிவித்துள்ளது

இதுகுறித்து ஆன்டர்ஸன் ட்விட்டரில் கூறுகையில், " தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது எனக்கு வருத்தமளிக்கிறது. என்னுடை மார்பு விலா எலும்பு உடைந்துவிட்டதால் என்னால் விளையாட முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் நான் குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன். என்னுடைய அணிக்கு என்னுடைய ஆதரவு தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்

இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரான ஆன்டர்ஸன் இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் மன்னன் முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள 600 விக்கெட் சாதனையை எட்ட இன்னும் ஆன்டர்ஸனுக்கு 14 விக்கெட்டுகளே தேவைப்படுகிறது. இலங்கைக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடரில் இதை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x