

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கி்றார்.
கேப்டன் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக முதலிடத்தில் நீடித்து வருகிறார். கோலியை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சோபிக்கத் தவறியதால் தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2-வது இடத்திலேயே நீடிக்கிறார்.
இந்திய அணி வீரர் ரஹானே 759 புள்ளிகளுடன் 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். புஜாரா 791 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்ததால், ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் 827 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தரவரிசைக்கு நகர்ந்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 549 ரன்கள்சேர்த்துள்ளார் லபுஷேன்.
அதேபோல ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததையடுத்து, 793 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 814 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக நீண்டநாட்களாக விளையாடாமல் இருந்தார். இருப்பினும் தரவரிசையில் எந்தவிதத்திலும் மாற்றம் இல்லாமல்794 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 772 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், முகமது ஷமி 771 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதைத் தொடர்ந்து நியூஸிலாந்து வீரர் நீல் வாக்னர் 852 புள்ளிகளுடன்2-வதுஇடத்திலும், மே.இ.தீவுகள் வீரர் ஹோல்டர் 830 புள்ளிகளுடன் 3-வதுஇடத்திலும் உள்ளனர்.