Published : 08 Jan 2020 01:41 PM
Last Updated : 08 Jan 2020 01:41 PM

விராட் கோலி புதிய மைல்கல்: டூப்பிளசிஸ் சாதனை முறியடிப்பு; ரோஹித் பின்னடைவு

இந்தூரில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, புதிய மைல்கல்லை எட்டி டூப்பிளசிஸின் சாதனையை முறியடித்தார்.

இந்தூரில் நேற்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. 143 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15 பந்துகள் மீதம் இருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 30 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் கோலி 25 ரன்கள் சேர்த்தபோது, கேப்டனாகப் பொறுப்பேற்று டி20 போட்டியில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி : கோப்புப்படம்

இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மட்டுமே கேப்டனாக இருந்து ஆயிரம் ரன்களை (1,112) டி20 ஆட்டங்களில் சேர்த்திருந்தார். தோனிக்குப் பின் ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி அதிவேகமாக 30 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் 31 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனையை எந்த கேப்டனும் இதுவரை முறியடிக்கவில்லை. ஆனால், விராட் கோலி 30 இன்னிங்ஸில் டி20 போட்டியி்ல் ஆயிரம் ரன்களைக் கடந்து டூப்பிளசிஸின் சாதனையை முறியடித்துள்ளார்.

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 36 இன்னிங்ஸிலும், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 42 இன்னிங்ஸிலும், வில்லியம் போர்டர்பீல்ட் 54 இன்னிங்ஸிலும், தோனி 57 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.

டி20 போட்டியில் அதிகமான ரன்களை யார் சேர்ப்பது என்ற போட்டி இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் நீடித்து வந்தது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், விராட் கோலி முதலிடத்துக்கு நகர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆட்டம் நடைபெறுவதற்கு முன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் 2,633 ரன்களுடன் சமநிலையில் இருந்தனர். கோலி நேற்றைய ஆட்டத்தில் 30 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரோஹித்தின் சாதனையை முறியடித்து 2,693 ரன்களைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x