Last Updated : 07 Jan, 2020 09:13 PM

 

Published : 07 Jan 2020 09:13 PM
Last Updated : 07 Jan 2020 09:13 PM

பழிக்குப் பழி : நோ-பால் சாதக இங்கிலாந்து வெற்றி- பரபரப்பான ஆட்டத்தில் மீண்டும் ‘சோக்கர்ஸ்’ ஆன தென் ஆப்பிரிக்கா

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் பரபரப்பான 5ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை அதன் 2வது இன்னிங்சில் 248 ரன்களுக்குச் சுருட்டி இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியுள்ளது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 223 ரன்களுக்குச் சுருண்டது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சிப்லியின் சதம் மற்றும் பென் ஸ்டோக்சின் 47 பந்து 75 ரன் காட்டடி தர்பாரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 என்ற ஸ்கோரில் டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இன்று காலை 126/2 என்ற நிலையில் இறங்கியது. வெற்றி பெற முடியாது இருந்தாலும் ட்ராவுக்கான வாய்ப்பு இருந்தது. கிட்டத்தட்ட ட்ரா செய்யும் நிலைக்கு தென் ஆப்பிரிக்கா வந்தது, ஆட்டம் முடிய 30 ஓவர்கள் இருக்கும் போது 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது தென் ஆப்பிரிக்கா, ஆனால் அப்போது பென் ஸ்டோக்ஸ் வந்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து காலி செய்து ஹாட்ரிக் நிலைக்கு வந்தார், ஆனால் ரபாடா ஹாட்ரிக் பந்து புல்டாஸாக அமைய தப்பினார்.

இன்னும் 8 ஓவர்களை பிலாண்டர், ரபாடா ஜோடி தடுத்தாடி விட்டால், சமாளித்து விட்டால் ட்ரா ஆகியிருக்கும், இங்கிலாந்து இருதயம் உடைந்திருக்கும். ஆனால் பென் ஸ்டோக்ஸ் கடைசியில் அதி ஆக்ரோஷமாக ஒரு எகிறு பந்தை வீச பிலாண்டர் கிளவ்வில் பட்டு கல்லியில் போப் கையில் கேட்ச் ஆனது. இங்கிலாந்து கொண்டாடத் தொடங்கியது, தென் ஆப்பிரிக்கா மீண்டும் ‘சோக்கர்ஸ்’ அடையாளத்தைத் தக்க வைத்தது.

ஆனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய நடுவர் பால் ரைஃபல் இங்கிலாந்து அணிக்கு உதவியது போல் வேறு ஒருவரும் உதவியிருக்க முடியாது, பென் ஸ்டோக்ஸ், பிராட், கரன் என்று அனைவரும் நோ-பால்களாக வீசித் தள்ளினர், ஒன்றைக் கூட நடுவர்கள் நோ-பால் என்று அறிவிக்கவில்லை, எப்படியாவது இங்கிலாந்து தொடரைச் சமன் செய்ய வேண்டும் என்பதில் ஜோ ரூட்டை விட நடுவர்களுக்கு அத்தனை அக்கறை இருந்ததை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.

இன்று இறங்கியவுடனேயே கேஷவ் மஹராஜ் முதல் நாள் ஸ்கோருடன் எதையும் சேர்க்காமல் 2 ரன்களில் ஆண்டர்சனின் அபார இன் டக்கர் பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். கேப்டன் டுபிளெசிஸ் தன் பங்குக்கு 57 பந்துகளைக் கடத்தி 17 ரன்கள் எடுத்து பொறுமையின் திலகம் 4வது இன்னிங்சின் கட்டை மன்னன் டுபிளெஸிஸ் பெஸ் பந்தை ஸ்வீப் ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

தொடக்க வீரர் மலான் 84 ரன்களில் அடுத்ததாக புதிய பந்தில் சாம் கரனின் ஆங்கிள் பந்தை எட்ஜ் செய்து ஸ்டோக்ஸ் கேட்சுக்கு வெளியேறினார் தென் ஆப்பிரிக்கா 171/5. குவிண்டன் டி காக் தன் ஆக்ரோஷத்தையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு கோபத்துடன் தடுப்பாட்டம் ஆடி 107 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார்.

ஆனால் டி காக் 50 ரன்களில் ஜோ டென்லியின் மிக மோசமான அரைக்குழி பந்தை ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இவருக்கு இத்தகைய பொறியை அமைத்தார் கேப்டன் ஜோ ரூட். வீழ்ந்தார் டி காக்.

ரசி வான் டெர் டியூசன் 140 பந்துகள் ஆடி இங்கிலாந்தை வெறுப்பேற்றி 17 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது பிராட்-ரூட் கூட்டணியின் சமயோசித பீல்ட் வியூகத்திற்கு இரையானார், அருமையான கேட்பன்சி, மிட் ஆனில் நின்றிருந்த ஆண்டர்சனை நகர்த்தி லெக் கல்லிக்கு கொண்டு வந்தனர், பிராட் வீசிய பந்து லெக் ஸ்டம்பை நோக்கி வேகமாக வர இவர் வழக்கம் போல் ஆட லெக் கல்லியில் சரியாகக் கேட்ச் ஆனது, மிக அருமையான பொறிவைத்துப் பிடித்துப் போட்ட கேப்டன்சி.

அதன் பிறகுதான் டிவைன் பிரிடோரியஸ், நார்ட்யே இருவரும் பேட்டிங் ஆடக்கூடியவர்கள் ஆனால் பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷத்துக்கு ஒரே ஓவரில் இருவரும் வெளியேற ஸ்டோக்ஸ் ஹாட்ரிக் வாய்ப்பை ரபாடா தடுத்தார், கடைசியில் பென் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷ ஷார்ட் பிட்ச் பந்தை பிலாண்டர் கல்லியில் கேட்ச் கொடுக்க தென் ஆப்பிரிக்க அணி 138வது ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தொடரை 1-1 என்று சமன் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x