Published : 07 Jan 2020 05:09 PM
Last Updated : 07 Jan 2020 05:09 PM

2வது தொடக்க வீரர் யார்? - ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இடையே கடும் போட்டி

குவஹாத்தியில் மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டியின் போது ஷிகர் தவண் பயிற்சிக்கு வந்து ஆடிய போது ‘கப்பர்ஜி, கப்பர்ஜி’ என்று ரசிகர்கள் அவருக்கு உற்சாகமூட்டினர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ராகுல் பேட் செய்ய களமிறங்கிய போது பயிற்சிக்காக பல ஷாட்களை ஆடி அங்கிருந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இந்நிலையில் இன்று இந்தூரில் 2வது டி20 நடைபெறுகிறது.

இந்நிலையில் தன் பார்மை மீட்டெடுத்த ஷிகர் தவன், ஏற்கெனவே நல்ல பார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் இருவரில் யார் ரோஹித் சர்மாவுடன் உறுதுணை தொடக்க வீரராகக் களமிறக்கப்படுவார் என்பது சுவாரசியமாகியுள்ளது, இருவருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் ரோஹித் இல்லை என்பதால் இப்போதைக்கு ராகுல், தவண் இறங்குவார்கள் என்பதில் மாற்றமில்லை, ஆனால் ரோஹித் அணிக்குத் திரும்பினால் யார் தொடக்க வீரர் என்பதில் சிக்கல் எழும், உதாரணமாக ஷிகர் தவண் இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடினார் என்றால் அவரும் தொடக்க இடத்தைத்தான் விரும்புவார்.

ஷிகர் தவண் பேட்டிங்கை மறந்திருந்த காலக்கட்டத்தில் கே.எல்.ராகுலின் ஸ்கோர் 62, 11, 91 மற்றும் 6, 102, 77 என்று மே.இ.தீவுகளுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் கலக்கினார். குறிப்பாக 56 பந்துகளில் 91 ரன்கள் மும்பையில் நடைபெற்ற வாழ்வா சாவா டி20 போட்டியில் ராகுல் எடுத்தது. அதே போல் சதம் அடித்த விசாகப்பட்டிணம் போட்டியும் இந்திய அணிக்கு வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியாக இருந்தது.

விராட் கோலியும் கூட ராகுலை மிடில் ஆர்டர் தெரிவாக விரைவுப் படுத்தப் போவதில்லை என்று முன்பு ஒருமுறை தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்திய சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட்டில் ராகுல் காட்டும் பார்ம் அவரை தொடக்கத்தில் தக்கவைக்கும் என்றே தெரிகிறது. ஆனால் ஷிகர் தவணிடமிருந்து கடும் போட்டி எழுந்தால் ரோஹித் சர்மா திரும்பும் போது நியூஸிலாந்து தொடரில் யார் தொடக்க வீரர் என்ற சிக்கல் மீண்டும் எழ வாய்ப்புள்ளது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ரிஷப் பந்த்தை உட்கார வைத்து விட்டு, ராகுலை கீப்பராக இறக்கி, மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் திறமையைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று தெரிகிறது. எனினும் இது ஒரு ஆரோக்கியமான போட்டி என்பதோடு, தொடக்க வீரர்கள் எந்த ஒரு வடிவத்திலும் சிறப்பாகத் திகழ்வது அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பதால் கைவசம் கூடுதல் தொடக்க வீரர் பார்மில் இருப்பது நல்லதுதானே என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x