Published : 07 Jan 2020 04:14 PM
Last Updated : 07 Jan 2020 04:14 PM

‘2-ம் நாள் உணவு இடைவேளை வந்தவுடனேயே இன்னும் இரண்டரை நாள்தான் உள்ளது என்ற மனநிலை தோன்றும்’

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாகக் குறைக்கப் பரிசீலித்து வருவதாக ஐசிசி ஒன்றைச் சொன்னாலும் சொன்னது, அதற்கு கடுமையான எதிர்ப்பு அம்புகள் பல திக்குகளிலிருந்தும் பாய்ந்து வருகின்றன.

ஏறக்குறைய அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை உங்கள் வணிக நலன்களிலிருந்து விட்டு விடுங்களேன் என்று கெஞ்சுமளவுக்கு கருத்துகள் குவிந்து விட்டன.

200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த சாம்பியன் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தற்போது அந்த குரல்களில் தன் குரலையும் இணைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் 143 ஆண்டுகள் பழமையானது, ஆனால் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைத்து விட்டு குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டை முன்வைக்கிறது. ஏற்கெனவே விராட் கோலி, ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், நேதன் லயன் போன்ற ஜாம்பவான்கள் இந்த யோசனையை முட்டாள் தனமானது என்று வர்ணித்தனர்.

தற்போது சச்சின் டெண்டுல்கர், “தூய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பார்வயிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை போற்றும் நபர் என்ற முறையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒன்றும் செய்யக் கூடாது என்று நான் கருதுகிறேன். இத்தனையாண்டுகளாக இந்த வடிவம் எப்படி ஆடப்பட்டதோ அதில் கை வைக்கக் கூடாது

4 நாள் டெஸ்ட் என்றால் பேட்ஸ்மென் என்ன நினைப்பார் குறைந்த ஓவர் கிரிக்கெட்டின் ஒரு நீண்ட வடிவம் என்றே கருதுவார், இரண்டாம் நாள் ஆட்டம் உணவு இடைவேளை வந்தவுடனேயே இன்னும் இரண்டரை நாட்கள்தான் டெஸ்ட் உள்ளது என்ற மனநிலை ஏற்பட்டு டெஸ்ட் போட்டியே சோர்ந்து விடும்.

5ம் நாள் பிட்சை ஸ்பின்னர்களிடமிருந்து பறிப்பது முதல் நாள் பிட்சை வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து பறிப்பது போலாகும். முதல் நாள் பிட்சில் பந்து வீச விரும்பாத வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை, 5ம் நாள் வீச விரும்பாத ஸ்பின்னர்களும் உலகில் இருக்க வாய்ப்பில்லை.

5ம் நாள் கிரிக்கெட் பிட்ச்சில் பந்துகள் திரும்பும், எழும்பும், அதன் சமச்சீரற்ற தன்மை டெஸ்ட் போட்டிக்கு சுவாரஸியம் ஊட்டுவது. முதல் 2 நாட்களில் இது இருக்காது.

ஏன் இப்படி திடீரென 4 நாள் டெஸ்ட் என்று யோசிக்க வேண்டுமென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வணிகநலன்களாக இருக்கலாம். ஆம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் கூட்ட இருக்கலாம். ஆம் ரசிகர்கள் பார்வையில் முக்கியம்தான் ஆனால் ரசிகர்களுக்காகவென்றே ஒருநாள், டி20 இருக்கின்றனவே. இப்போது டி10 கிரிக்கெட்டும் வந்து விட்டது. எனவே தூய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது விட்டு வைக்கப்பட வேண்டாமா.

டெஸ்ட் கிரிக்கெட் என்ற ஒரே வடிவத்தில்தான் பேட்ஸ்மென்களுக்கு சவால் உள்ளது. அதனால்தான் இது டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இது 2 அமர்வுகளில் முடிவதல்ல. சில சமயங்களில் கடினமான பிட்ச்களில் நீண்ட நேரம் ஆட வேண்டிய தேவை ஏற்படும்.

நல்ல டெஸ்ட் போட்டிகளுக்கு நல்ல பிட்ச்களை அமைக்க வேண்டும். டெஸ்ட் பிட்ச்களில் தரம் இருந்தால் ஆட்டம் அறுவையாக மாறாது. ஆனால் சில பிட்ச்களில் பவுலரே விக்கெட் எடுக்க முடியாது என்று உணரும் பிட்ச்கள் உள்ளன.

உடனே நாம் மெய்டன் ஓவர்கள் வீசி கட்டுப்படுத்துவோம் பேட்ஸ்மேன் தவறு செய்யட்டும் என்று அவர் காத்திருக்கும் பிட்ச்கள் உள்ளன. பேட்ஸ்மென்களும் தவறு எதுவும் செய்யாவிட்டால் ஆடிக்கொண்டேயிருக்கலாம் என்று நினைப்பார். எனவே நல்ல பிட்ச்களை உருவாக்குவதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை வரவழைக்கும் ஒரே வழிமுறை.

எனவே ஒருநாள், டி20-யைப் பார்த்து ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளிலும் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர், அதற்கு நல்ல பிட்ச்களை அமைப்பதுதான் வழி. அப்போதுதான் ஸ்டேடியத்துக்கும் வருவார்கள் அல்லது டிவி செட் முன் அமர்ந்திருப்பார்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் 4 நாள் டெஸ்ட்டுக்கு தன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x