Last Updated : 07 Jan, 2020 02:06 PM

 

Published : 07 Jan 2020 02:06 PM
Last Updated : 07 Jan 2020 02:06 PM

இந்திய அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை; அதுக்கும் மேல: டெஸ்ட் தொடர் குறித்து ஆஸி. கேப்டன் பெய்ன் கருத்து

ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் : கோப்புப்படம்

சிட்னி

இந்திய அணியை டெஸ்ட் தொடர் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இல்லை, அனைத்து தரப்பினரும் டெஸ்ட் தொடரை ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற வரலாற்றைக் கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில் முக்கிய பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணியில் இடம் பெறாமல் இருந்தனர்.

இதனால் பலவீனமான ஆஸ்திரேலிய அணியை எளிதாக இந்திய அணி வீழ்த்திவிட்டது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணி வீரர்கள் அனைவருமே அங்குச் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஆனால், கடந்த ஆண்டு இருந்ததைப் போல் ஆஸ்திரேலிய அணி தற்போது பலவீனமாக இல்லை. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், லாபுஷேன் என வலிமையான வீரர்கள் அணிக்கு திரும்பியிருப்பது சாதகமான அம்சமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து, இந்திய அணி அங்கு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டெஸ்ட் தொடர் குறித்துக் கடந்த காலத் தோல்விக்குப் பழிதீர்க்கவும் ஆஸ்திரேலிய அணி காத்திருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பைன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் மோதவுள்ள டெஸ்ட் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், நியூஸிலாந்துக்கு எதிராகவும் கிடைத்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

அடுத்ததாக நாங்கள் வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம்.அதன்பின் இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இந்த தொடரை ரசிகர்கள் மட்டுமல்ல வீரர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

நிச்சயமாக இந்திய அணியைப் பழிவாங்கும் எண்ணம் எங்கள் மனதில் இல்லை. அதைக்காட்டிலும் அதிகமான ஆர்வம்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு விளையாடியதைக் காட்டிலும் வித்தியாசமான அணியுடன் இந்திய அணி விளையாடுவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இருக்கும் வேளையில் இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் பெறும். அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என தீர்மானமாக இருக்கிறோம். ஒவ்வொரு அணியும் இரக்கமற்ற முறையில் இருப்பது நியாயம்தான்.

உலக டெஸ்ட் போட்டி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளும் செல்ல வாய்ப்பு இருப்பதால், ஒவ்வொரு போட்டியில் கிடைக்கும் புள்ளிகளும் முக்கியம்.

இந்திய அணியை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது, பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகிய சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

கடந்த டெஸ்ட் தொடரில் ஸ்மித், வார்னரை இழந்தது குறையாக இருந்தாலும், இந்த முறை இருவருடன் சேர்ந்து லாபுஷேன், டிராவிஸ் ஹெட் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த ஆண்டு இல்லை, இருந்திருந்தால் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்
இவ்வாறு பைன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x