Published : 06 Jan 2020 06:12 PM
Last Updated : 06 Jan 2020 06:12 PM

பிக்பாஷ் லீகின் 2வது அதிவிரைவு அரைசதம்: ஒரே ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள்; இங்கி. டி20 ஸ்பெஷலிஸ்ட் டாம் பான்ட்டன் அதிரடி

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் டி20 தொடரில் பிரிஸ்பன் ஹீட், சிட்னி தண்டர் அணிகள் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அதிரடி வீரர் டாம் பான் ட்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பிக் பாஷ் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார்.

இவர் 16 பந்துகளில் அரைசதம் கண்டார், இதற்கு முன்பாக கிறிஸ் கெய்ல் 12 பந்துகளில் அரைசதம் கண்டதுதான் இன்று வரை பிக்பாஷ் அதிவிரைவு அரைசதமாக இருந்து வருகிறது.

மழை காரணமாக 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட போட்டியில் பிரிஸ்பன் ஹீட் அணி 119 ரன்களை விளாசியது. இந்த அணிக்காக இறங்கிய இங்கிலாந்து டி20 ஸ்பெஷலிஸ்ட் டாம் பான் ட்டன் இன்னிங்சின் 4வது ஓவரில் காட்டடி தர்பாரில் இறங்கினார், இதற்கு சிக்கியவர் சிட்னி தண்டர் அணியின் ஆப் ஸ்பின்னர் அர்ஜுன் நாயர் ஆவார்.

முதல் பந்து டாட் பால், ஆனால் அதற்கு பிறகு 5 பந்துகளும் மைதானத்துக்கு வெளியே சிக்சர்களாக பறந்தன. முதல் சிக்ஸ் டீப் மிட்விக்கெட், லாங் ஆன் இடையே பறந்தது. 2வது நேர் சிக்ஸ். பிறகு டீப் மிட்விக்கெட்டில் 3வது சிக்ஸ். பிறகு லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ், பிறகு இறங்கி வந்து டீப் மிட்விக்கெட்டில் இன்னொரு சிக்ஸ். அர்ஜுன் நாயர் ஓவர் கிழித்துத் தொங்க விடப்பட்டது.

கிறிஸ் லின் தன் பங்குக்கு 13 பந்துகளில் 31 ரன்களுக்கு சாத்தி எடுக்க, பான் ட்டன், லின் ஜோடி 5 ஓவர்களில் 90 ரன்களை விளாசினர். பான் ட்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.

சிட்னி தண்டர் இன்னிங்சின் போது மேலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு 5 ஒவர்களாக ஆக்கப்பட்ட போது அந்த அணி 61/4 என்று முடிந்து 16 ரன்க்ள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இந்த பான் ட்டன் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வரும் ஐபிஎல் தொடரில் ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x