Published : 06 Jan 2020 05:20 PM
Last Updated : 06 Jan 2020 05:20 PM

வெற்றி பெறும் நிலையிலிருந்தும் ‘போங்கு’ ஆட்டம்: வார்னர், லபுஷான் செயலால் ஆஸி.க்கு அபராதம்

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆஸ்திரேலிய மனப்போக்கிற்காகத்தான் தென் ஆப்பிரிக்காவில் பால் டேம்பரிங்கில் சிக்கி தடை விதிக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் அழுது தற்போது திருந்தி விட்டதாகக் கூறி வார்னர், ஸ்மித் ஆடிவருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து, கேப்டன் கேன் வில்லியம்சனின் சேவையையும் இழந்து தத்தளித்து 3-0 ஒயிட்வாஷ் உறுதி என்ற நிலையில் அந்துநொந்து போயிருக்கும் நியூஸிலாந்துக்கு எதிராக மனசாட்சியே இல்லாமல் போங்காட்டம் ஆடினர் லபுஷான் மற்றும் டேவிட் வார்னர்.

சிட்னியில் இன்று முடிவடைந்து ஒயிட்வாஷ் வாங்கிய நியூஸிலாந்து அணி பந்து வீசும்போது, ஆஸி. அணி தன் 2வது இன்னிங்சில் களத்தில் வார்னர், லபுஷான் ஆகியோர் மூலம் முன்னிலையை விஸ்தரித்துக் கொண்டிருந்தது.

இதில் இன்னிங்சின் 50வது ஓவரில் மார்னஸ் லபுஷான், டேவிட் வார்னர் ஆகியோர் நடுப்பிட்சில் ஸ்பைக்ஸ் ஷூவுடன் ஓடி அத்துமீறியுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பிட்ச் மேலும் கீழும் ஆகி பேட்ஸ்மென்களுக்கு கடினப்பாடுகளை அளித்து வரும் நிலையில் 2வது இன்னிங்சில் நியூஸி. பேட்டிங்கை பாதிக்கும் வண்ணம் நடுப்பிட்சை சேதம் செய்யும் முயற்சியில் நடுவர் அலீம் தார் 5 ரன்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

எடுத்தவுடன் இது நடந்தால் நடுவர் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும், ஆனால் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பிட்சை சேதம் செய்தல் கூடாது.

அபராதம் எல்லாம் இருக்கட்டும், இதற்கான தண்டனை மிகக்குறைவு என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர், ஆனால் நம் கேள்வி என்னவெனில் அந்து நொந்து இருக்கும் நியூஸி. அணியை போய் காலி செய்வதற்கு கிரிக்கெட்டுக்குப் புறம்பான போங்காட்டங்களை ஆடுவதா என்பதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x