

2019-ம் ஆண்டில் 3 வடிவங்களிலும் சேர்த்து 2442 ரன்களுடன் பிரமாதமாக ஆடிய ரோஹித் சர்மா, உலகக்கோப்பையின் போது எழுந்த விமர்சனம் ஒன்றிற்கு எதிர்வினையாற்றினார்.
அதாவது இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறி தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தங்கியிருந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து குடும்பத்தினரை இழுப்பதா என்று பலரும் கேள்வி எழுப்பினர், வீரர்கள் சிலரும் கேள்வி எழுப்பினர்.
இந்திய ஒருநாள், டி20 அணிகளின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா அத்தகைய பேச்சுகள் தன்னைக் காயப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
அவர் பிடிஐக்கு அளித்த நேர்காணலில் இது தொடர்பாகக் கூறும்போது, “எங்களுக்கு ஆதரவாக எங்கள் குடும்பத்தினர் இருக்கின்றனர். நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர்.
இதைப் பற்றி எழுதப்படும் போது என் நண்பர்கள் சிலர் என்னிடம் இந்த விவகாரம் பற்றித் தெரிவித்த போது நான் உண்மையில் சிரித்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் இங்கிலாந்தில் அனுமதியை மீறித் தங்கியதாக எழுதிக்கொண்டே இருந்தார்கள், ஒருக்கட்டத்தில் என் குடும்பத்தினரையும் இழுத்தனர். இது சரியல்ல.
என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் என் குடும்பத்தை இழுப்பது முறையாகாது, அவர்களுக்கு என்னை விட்டால் வேறு எதுவும் தெரியாது.
விராட் கோலி கூட குடும்பம் பற்றி நான் உணர்வதைத்தான் உணர்வார் என்று கருதுகிறேன்” என்றார் ரோஹித் சர்மா.