Last Updated : 05 Jan, 2020 01:42 PM

 

Published : 05 Jan 2020 01:42 PM
Last Updated : 05 Jan 2020 01:42 PM

நோ-பால் கொடுப்பதை மறந்துவிட்டார்களா நடுவர்கள்? தெ.ஆப்பிரிக்கா-இங்கிலாந்து டெஸ்டில் சர்ச்சை

கேப்டவுன் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையே நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் நோ-பால் வழங்காமல் நடுவர்கள் தவிர்த்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடர் தோல்விகளைச் சந்தித்து நொந்த நிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு முன்னாள் வீரர்கள் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.

முன்னாள் விக்கெட் கீப்பர் பவுச்சர் பயிற்சியாளராகவும், ஜேக் காலிஸ் பேட்டிங் ஆலோசகராகவும், தலைமைத் தேர்வாளராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் வந்தபின் தென் ஆப்பிரிக்க அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. இதனால்தான் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நீண்ட நாட்களுக்குப்பின் வெற்றியை ருசித்தது.

கேப்டவுனில் தற்போது நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆவேசத்துடன் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஏராளமான நோ-பால்களை வீசிய போதிலும் அதைக் களத்தில் இருக்கும் நடுவர் பால் ரீபில் கண்டுகொள்ளவில்லை.

தொழில்நுட்பங்களை கிரிக்கெட்டில் மிகவும் நுணுக்கமாகச் சமீபகாலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஏற்படும் சிறுதவறுகளைக் கூட கண்டுபிடித்துவிடும் நிலையில், ஏன் கள நடுவர் கண்ணுக்கு முன்னால் நோ-பாலை பார்க்கத் தவறினார் என்ற கேள்வி எழுந்தது.

பென் ஸ்டோக்ஸ் ஓவருக்கு 3 முதல் 4 நோ-பால்களை வீசியது டிவி ரீப்ளேயில் நன்றாகத் தெரிந்தது. ஆனால், இவை எதையும் நடக்காதது போல் கள நடுவர் இருந்தது வியப்புக்குரியதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்குச் சார்பாகக் கள நடுவர் பால் ரீபில் நடக்கிறாரா அல்லது நடுவர்களின் கணிக்கும் தரம் குறைந்துவிட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியது

ஏனென்றால் வர்ணனையாளர் பகுதியில் இருந்து பேசிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் போலக், " பிற்பகல் செஷனுக்கு பின் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 12 நோபால்களை வீசியுள்ளது. ஆனால் கள நடுவர் பால் ரீபல் ஒரு நோபாலைக் கூட கவனிக்கவில்லை, நோபால் வழங்கவும் இல்லை" என்று தெரிவித்தார். இந்த நோபால்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆட்டமிழந்திருந்தால் அந்த அணியின் நிலை என்னாகி இருக்கும்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராம் பிரசாத் வர்ணனையாளர் பகுதியில் இருந்து பேசுகையில், " கோடிக்கணக்கான பவுண்டுகள் செலவுசெய்து சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பந்துவீச்சாளர்கள் நோபால் வீசுகிறார்களா என்பதைக்கூட நடுவர்கள் கவனிக்கவில்லை என்றால் என்ன செய்வது வெட்கக்கேடு. ஆடுகளத்துக்குள் ஓடிவிட்டார் என்று ஸ்டூவர்ட் பிராடை எச்சரித்த நடுவர் பால் ரீபல் நோபால் குறித்து ஏன் பேசவில்லை, பார்க்கவில்லை. முட்டாள்தனமாக இருக்கிறது இதுபோன்ற நடுவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது" என்று தெரிவித்தார்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் 20 நோபால்கள் வீசியபோதிலும் அதை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

குறிப்பாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்களான மாஸன் கார்னே, பென் ஸ்டோக்ஸ், டாம் கரன், மார்க் வுட் ஆகியோர் தங்களின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற முதல் விக்கெட் அனைத்தும் நோபால் மூலம் பெற்றவை என்பது தொலைக்காட்சி ரீப்ளேயில் தெரிந்தது. ஆனால், அனைத்தையும் திரும்பப் பெற்றிருக்க வேண்டும் இதுவரை அது நடக்கவில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு அனைத்தும் துணைபோவதையே காட்டுகிறதா?

இங்கிலாந்து அணிக்கு முழுநேர பந்துவீச்சு பயிற்சியாளரும், பயிற்சின் போது நோ-பால் கண்டுபிடித்துக் கூறும் நடுவர்களும் இல்லாதது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நோபால் வீசக் காரணமாக இருக்கிறது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அதிகமான ஊதியத்தை ஆசை காட்டி தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இன வீரர்களைக் கவர்ந்திழுத்து வருகிறது இங்கிலாந்து கவுண்டி அணிகள். தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஏற்கனவே பீட்டர்ஸன் சென்று இங்கிலாந்து அணிக்காக ஆடி தற்போது ஓய்வை அறிவித்துவிட்டார். அதன்பின் தென் ஆப்ரிக்காவில் இருந்து, ஸ்டெயின், சமீபத்தில் ஓய்வு அறிவித்துள்ள பிலாண்டர் ஆகியோர் தங்கள் ஓய்வுக்குப்பின் இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாட உள்ளனர்.

ஏற்கனவே தோல்வி மேல் தோல்வியால் மனவலிமை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தற்போதுதான் மீண்டு வருகிறது. ஆனால்,
கிரிக்கெட் உலகின் பலவலிமை படைத்த இங்கிலாந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர்களைத் தொடர்ந்து கவர்ந்திழுப்பதும், இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளில் அதிகமாக நோபால் சர்ச்சை அடிக்கடி எழுவதும் அறத்துக்கு மாறானதாக இல்லையா?

களநடுவராக இருந்துவரும் பால் ரீபல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய சிறந்த வீரர். கிரிக்கெட்டின் மீது அதீதமான நம்பிக்கையும், பற்றும்கும் இருக்கும் பால் ரீபல் நடுவர் பணியில் திறமைக் குறைவாக செயல்படுவாரா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

போட்டியின்போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பலரும் நோபல் வீசியும் அதை நடுவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது எதை உ ணர்த்துகிறது தெரியவில்லை, அல்லது எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி விளையாடுகிறதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x