Last Updated : 04 Jan, 2020 06:32 PM

 

Published : 04 Jan 2020 06:32 PM
Last Updated : 04 Jan 2020 06:32 PM

கிரிக்கெட்டில் இருந்து இர்ஃபான் பதான் ஓய்வு: கபில்தேவுக்குப்பின் கிடைத்த ஆல்ரவுண்டர்

இந்தியஅணி வீரர் இர்ஃபான் பதான் : கோப்புப்படம்

மும்பை

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இன்று அறிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலியப் பயணம், பாகிஸ்தான் பயணம் ஆகியவற்றில் பதானின் பந்துவீச்சு இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது. பாகிஸ்தானில் இர்ஃபான் பதானின் வேகப்பந்துவீச்சையும், ஸ்விங் செய்யும் விதத்தையும் பார்த்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நெகிழ்ந்து பாராட்டினார்.

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே தொடரில் அதிகமான விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்தது மட்டுமல்லாமல் மேத்யூ ஹேடன், கில்கிறிஸ்ட் விக்கெட்டுகளை அங்கு வீழ்த்தி அவர்களுக்கு கிலியூட்டியவர் பதான்.

இந்திய அணியில் கபில் தேவுக்குப்பின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் யாரும் இல்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்திய அணிக்குக் கிடைத்தவர் இர்பான் பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 2006-ம்ஆண்டு பாகிஸ்தான் பயணத்தின் போது, தனது ஸ்விங் பந்துவீச்சில் சல்மான் பட், யூனுஸ் கான், முகமது யூசுப் ஆகிய மூன்று பேரையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பதான் பெற்றுள்ளார்.

கடைசியாக 2012-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் பதான் இடம் பெறவில்லை. முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த பதான் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் மட்டுமே விளையாடி வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிஏலத்தில் கூட தன் பெயரை அவர் வழங்கவில்லை

பரோடா அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த பதான் கடந்த ஜம்மு காஷ்மீர் ரஞ்சி அணிக்காகப் பயிற்சியாளராகவும் இருந்தார்.

தனது 19வயதில் இந்திய அணியில் இடம்பெற்று அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2003-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார்.

இந்திய அணிக்காக இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பதான் 100 விக்கெட்டுகளையும், 1,105 ரன்களும் சேர்த்துள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,544 ரன்களும், 173 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் விளையாடி 172 ரன்களும், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணியில் பதான் விளையாடியுள்ளார்.

தனது ஓய்வு குறித்து பதான் கூறுகையில், " என்னுடைய அனைத்து இந்திய அணி நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பரோடா அணியில் இருந்து இந்திய அணிக்குள் விளையாட வருவேன் என்று நினைக்கவில்லை. குறிப்பாக சச்சின், சேவாக் போன்ற மிகப்பெரிய வீரர்களுடன் நான் விளையாடிய பாக்கியம் கிடைத்தது. எனக்கு ஆதரவு அளித்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x