Last Updated : 04 Jan, 2020 03:49 PM

 

Published : 04 Jan 2020 03:49 PM
Last Updated : 04 Jan 2020 03:49 PM

'4 நாள், 3 நாள், அதற்குப் பின் டெஸ்ட் போட்டி காணாமல் போகும்': விராட் கோலி ஆவேசம்

விராட் கோலி : கோப்புப்படம்

கவுகாத்தி

நான்கு நாட்கள் டெஸ்ட், அதன்பின் 3 நாட்கள் டெஸ்ட் போட்டி என்று சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருநாள் டெஸ்ட் போட்டியே காணாமல் போய்விடும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவேசமாகத் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி என்றாலே பாரம்பரியமாக 5 நாட்கள் நடத்தப்படுவதுதான். ஆனால், தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் டெஸ்ட் போட்டிக்கு காலப்போக்கில் மக்களிடையே வரவேற்பு குறைகிறது என்று நினைத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பகலிரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தியது.

காலத்துக்கு ஏற்ற மாதிரி டெஸ்ட் போட்டியில் மாற்றம் கொண்டுவந்துள்ளோம் என்று ஐசிசி காரணம் கூறியதை பெரும்பாலானோர் வரவேற்றார்கள். இந்த சூழலில் டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களையே குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. தற்போது 5 நாட்களாக நடத்தப்படும் பாரம்பரிய டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக நடத்தலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.

ஐசிசியின் இந்தத் திட்டத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளித்தாலும், அந்நாட்டு அணி வீரர்களே இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். முட்டாள்தனமானது என்றும், பாரம்பரியத்தை மாற்றக்கூடாது என்றும் நாதன்லயன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் கவுகாத்தியில் நாளை இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், டெஸ்ட் போட்டி விளையாடும் நாட்களை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாகக் குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு விராட் கோலி சற்று ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

அவர் பேசியதாவது:

''என்னைப் பொறுத்தவரைக்கும், டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களை மாற்றக்கூடாது. டெஸ்ட் போட்டிகளை பிங்க் பந்தில், பகலிரவுப் போட்டியாக நடத்துவதே டெஸ்ட் போட்டியை வர்த்தகரீதியாக நகர்த்துவதாகவும், பொழுதுபோக்கு அம்சத்தைக் கூட்டுவதற்காகவும் என நான் நினைக்கிறேன்.

பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கலாம். ஆனால் பாரம்பரிய டெஸ்ட் போட்டியைப் பாழ் படுத்துதல் கூடாது. ஆதலால், எனக்கு 4 நாட்கள் டெஸ்ட் போட்டியில் நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை, பகலிரவு டெஸ்ட் போட்டியே மிகப்பெரிய மாற்றம், இதற்கு மேல் பாரம்பரிய டெஸ்ட் போட்டியில் மாற்றம் செய்யக்கூடாது.

இப்படியே சென்றால், 4 நாட்கள் டெஸ்ட் போட்டியை சில ஆண்டுகள் கழித்து, 3 நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தலாம் என்று ஆலோசனை கேட்பீர்கள். ஒருநாள் டெஸ்ட் போட்டியை காணாமல் போய்விடும்.

உங்களைப் பொறுத்தவரைக்கும் ரன்கள் எனும் எண்ணிக்கை, பொழுதுபோக்கு மட்டும்தான். பாரம்பரிய போட்டியைப் பாதுகாக்க வேண்டியதில்லை. இதுபோன்ற ஆலோசனைகளை நான் ஆதரிக்கவும் மாட்டேன், வரவேற்கவும் மாட்டேன். பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு இந்த ஆலோசனை சரியானது இல்லை. கிரிக்கெட் போட்டி உலகில் எவ்வாறு பரிணமித்தது, தொடங்கியது என்பதை அறிய வேண்டும், 5 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிதான் உயர்ந்தது.

டி20 போட்டி என்பது காலத்தின் மாற்றத்தால் புதிதாக உருவானது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தும் 100 பந்துகள் கிரிக்கெட் பற்றியும் பேச முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை என்னை மற்றொரு போட்டியில் ஈடுபடுத்தி பரிசோதிக்க விரும்பவில்லை''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x