Published : 04 Jan 2020 12:56 PM
Last Updated : 04 Jan 2020 12:56 PM

போஸ்டர் கூடாது, மார்க்கர், பேப்பருக்குத் தடை: கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை இந்தியா-இலங்கை டி20 போட்டி

அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மாலை 7 மணிக்கு கவுகாத்தி நகரில் உள்ள பர்சாபாரா மைதானத்தில் நடக்கிறது.

நாளை போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, சிக்ஸர், பவுண்டரிகளை உணர்த்தும் போஸ்டர்களை ரசிகர்கள் எடுத்து வரவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பெயர்களை எழுதும் போஸ்டர்களை எடுத்து வரவும், மார்க்கர் பேனா போன்றவற்றைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடுமையாகப் போராட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால், யாரேனும் போஸ்டரில் சிஏஏ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிக் காண்பிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச அளவில் பார்க்கப்படும் போட்டி என்பதால், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏதேனும் போஸ்டர்களில் எழுதி, எதிர்ப்பை வெளிப்படுத்தினால் சர்ச்சையாகும் என்பதால், ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் செல்போன், கார் சாவி, இருசக்கர வாகனங்களின் சாவி, ஹேண்ட் பேக், பர்ஸ் ஆகியவை மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அசாம் கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் தேவாஜித் சர்க்கார் கூறுகையில், "சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், அனைவரும் விழிப்புடன் இருந்து வருகிறோம். தேவையான அளவுக்கு போலீஸார் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம். ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள், மார்க்கர் பேனா, போன்றவற்றை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களைத் தவிர்த்து வெளியூர் மக்களும், வெளி மாநில மக்களும் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரை 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x