Published : 03 Jan 2020 06:43 PM
Last Updated : 03 Jan 2020 06:43 PM

‘நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு’ - நடுவரிடம் ஷுப்மன் கில் வாக்குவாதம்: 10 நிமிடங்கள் நின்று போன ஆட்டம்

நடப்பு இந்தியா ஏ கேப்டனான பஞ்சாபைச் சேர்ந்த இந்திய வீரர் ஷுப்மன் கில் டெல்லிக்கு எதிரான ரஞ்சி டிராபி ஆட்டத்தில் வெள்ளியன்று நடுவரிடம் வாக்குவாதம் புரிந்ததால் ஆட்டம் 10 நிமிடங்கள் தடைப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று எப்போது மூத்த நட்சத்திர வீரர் தோனி களத்தில் விதிமுறைகளை மீறி இறங்கினாரோ, எப்போது விராட் கோலி நடுவரை நோ-பால் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினாரோ, எப்போது இதே விராட் கோலி, சமீபமாக ரவீந்திர ஜடேஜா அவுட்டை மிகச்சரியாக நடுவர் கொடுத்தற்கு தனது வெறுப்பை முகத்தில் காட்டினாரோ, இந்திய கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு பாதுகாப்பு கோரும் நாள் விரைவில் வரும் என்று தெரிகிறது.

பொதுவாக உள்நாட்டு கிரிக்கெட்டில் வாக்குவாதம் நடைபெறும், ஆனால் பொதுவாக நடுவர்கள் தங்கள் தீர்ப்பை மாற்ற மாட்டார்கள், ஆனால் இப்போது புது ட்ரெண்டாக அவுட் தீர்ப்பை மாற்றிச் சொல்லு என்று நடுவர் வலியுறுத்தப்பட்டிருப்பதை பிசிசிஐ கவனமேற்கொள்ளுமா, கங்குலி நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பை வலுக்கச் செய்துள்ளது.

ஆம்! ரஞ்சி கோப்பை போட்டியில் இன்று இந்தியா ஏ கேப்டனும், பஞ்சாப் வீரருமான ஷுப்மன் கில் 10 ரன்களில் இருந்த போது மித வேகப்பந்து வீச்சாளர் ஷுபோத் பாட்டி என்பவர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்ததாக நடுவர் அவுட் தீர்ப்பளித்தார்.

ஆனால் விறுவிறுவென்று நேர் நடுவரிடம் வேகமாகச் சென்ற ஷுப்மன் கில் தான் அவுட் இல்லை உடனே தீர்ப்பை மாற்றிச் சொல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து ஸ்கொயர் லெக் அம்பயருடன் ஆலோசனை நடத்தி ஷுப்மன் கில் தொடர வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இவ்வளவு சண்டையிட்டு நடுவர் தீர்ப்பை மாற்றிய ஷுப்மன் கில் ஒன்றும் பெரிய இன்னிங்ஸை ஆடிவிடவில்லை, 23 ரன்களில் சிமர்ஜீத் சிங் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி வெளியேறிய அபத்தம் நிகழ்ந்தது.

டெல்லி அணி மேலாளர் விவேக் குரானா கூறும்போது, “நேர் நடுவர் மொகமட் ரஃபி, ஷுப்மன் கில் அவுட் என்றார். நேராக அவரிடம் சென்ற கில் அவரிடம் வாக்குவாதம் புரிந்து தீர்ப்பை மாற்றச்சொல்லி வற்புறுத்தினார். இதனையடுத்து ஸ்கொயர் லெக் நடுவர் பஷ்சிம் பதக்கை கலந்தாலோசித்த ரஃபி தன் தீர்ப்பை மாற்றினார்” என்றார்.

மேலும், “டெல்லி அணி கேப்டன் நிதிஷ் ராணா, நடுவரிடம் சென்று என் முதல் அவுட் தீர்ப்பை மாற்றினீர்கள் என்று கேட்டார். நாங்கள் வெளிநடப்புச் செய்யவில்லை. ஆட்ட நடுவர் ரங்கநாதன் இறங்கி சமரசம் செய்ய ஆட்டம் தொடங்கியது, இதனால் ஆட்டம் சுமார் 10 நிமிடங்கள் தடைபட்டது.

வீரர்கள் நடத்தையை கண்டிக்குமா பிசிசிஐ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x