Published : 03 Jan 2020 05:24 PM
Last Updated : 03 Jan 2020 05:24 PM

மறக்க முடியுமா? ஓவலில் ஹஷிம் ஆம்லா செய்த சாதனை: 385 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி

2012 இங்கிலாந்து கோடைக்காலத்தில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டித் தொடருக்காகச் சென்றது, அதில் ஜூலை 19- 23 தேதிகளில் முதல் டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது, அதாவது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஹஷிம் ஆம்லா.

இங்கிலாந்து அணிக்கு ஸ்ட்ராஸ் கேப்டன், தென் ஆப்பிரிக்க அணிக்கு கிரேம் ஸ்மித் கேப்டன், இரு அணிகளும் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலுமே வலுவான அணியாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சில் ஆண்டர்சன், பிராட், டிம் பிரஸ்னென், அருமை ஆஃப் ஸ்பின்னர் கிரேம் ஸ்வான்.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஸ்ட்ராஸ், குக், ட்ராட், பீட்டர்சன், இயன் பெல், பொபாரா என்று வரிசை கட்ட, தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்மித், ஆம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி என்று வரிசை கட்ட, தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் ஸ்டெய்ன், பிலாண்டர் , மோர்னி மோர்கெல், காலிஸ், இம்ரான் தாஹிர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. மோர்னி மோர்கெல் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்ட்ராஸ் டக் அவுட் ஆகி எல்.பி.யில் வீழ்ந்தார். ஆனால் குக் 115 ரன்களையும் ட்ராட் 71 ரன்களையும் கெவின் பீட்டர்சன் 42 ரன்களையும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் 60 ரன்களையும் எடுக்க 385 ரன்கள் என்ற நல்ல முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் மோர்கெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன், காலிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மீண்டும் தென் ஆப்பிரிக்கா இறங்கிய போது இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்த கடுமையாகத் திணறியது, என்பதோடு தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித், ஆம்லா, காலிஸ் மூவரும் ஆண்டர்சன், பிராட் உள்ளிட்டோர் பந்து வீச்சை பிரித்து மேய்ந்து விட்டனர்.

ஸ்மித் 131 ரன்களை எடுக்க ஹஷிம் ஆம்லா சுமார் 790 நிமிடங்கள் கிரீசில் நின்று 529 பந்துகளைச் சந்தித்து 35 பவுண்டரிகளுடன் 311 ரன்கள் என்ற மாரத்தன் இன்னிங்சை ஆடி இங்கிலாந்தை காய விட்டார். இது போதாதென்று ’இதோ, நான் என்ன ஏப்பை சோப்பையா? என்று இறங்கிய ஜாக் காலிஸ் தன் பங்குக்கு 23 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 182 நாட் அவுட், ஆம்லாவும் 311 நாட் அவுட். 189 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 637/2 என்று டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணி பயங்கர வெறுப்புடனும் சோர்வுடனும் மீண்டும் இறங்கி 97 ஓவர்களில் 240 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்டெய்ன் 5/56, இம்ரான் தாஹிர் 3 விக்கெட்.

தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி. மிக அருமையான டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து களத்தில் காய்ந்ததை அவர்களால் மறக்க முடியாது. ஆம்லாவின் தென் ஆப்பிரிக்க முதல் முச்சதம் வெற்றியில் முடிந்ததில்தான் அவருக்கு மகிழ்ச்சி. இவர்தான் ஆட்டநாயகனும் கூட. ஓவலில் முச்சதம் அடித்த 2வது வீரர். 385 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்துவிட்டு தங்கள் சொந்த மண்ணில் இப்படியொரு தோல்வியை, அதுவும் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை. 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று கைப்பற்றியது. தொடர் நாயகனாகவும் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்து வீரர் மேட் பிரையருடன் விருதைப் பகிர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x